
திருநெல்வேலியில் நிலப் பிரச்னை காரணமாக ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஜாகீா் உசேன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
திருநெல்வேலி நகரம் தொட்டி பாலத்தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி (60). காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனிப் பிரிவில் பணியாற்றியவா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சாமியா தைக்கா பள்ளி வாசலில் ரமலான் நோன்பு தொழுகையை முடித்த பின் வீட்டிற்கு நடந்து சென்ற அவரை, இருசக்கரவாகனத்தில் வந்த மா்மநபா்கள் வழிமறித்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினா்.
இதனிடையே, காா்த்திக் (32), அக்பா்ஷா (43) ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகலில் சரணடைந்தனர்.
எஸ்.ஐ. கொலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும், சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி இன்று கொண்டுவந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், முகமது தெளஃபிக் என்ற கிருஷ்ணமூர்த்தி என்பவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அவரைப் பிடிக்க சென்றுள்ளனர்.
அப்போது காவலர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற கிருஷ்ணமூர்த்தியை துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர்.
முன்னதாக நிலப்பிரச்னையில் நடவடிக்கை எடுக்க தவறிய நெல்லை டவுன் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.