கோப்புப் படம்
கோப்புப் படம்

நேரடி வரி நிலுவையில் 67% வசூலிப்பது கடினம்: நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் சிபிடிடி தகவல்

‘மொத்த நேரடி வரி நிலுவையான ரூ.43 லட்சம் கோடியில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 67 சதவீதத்தை வசூல் செய்வது கடினம்
Published on

‘மொத்த நேரடி வரி நிலுவையான ரூ.43 லட்சம் கோடியில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 67 சதவீதத்தை வசூல் செய்வது கடினம்’ என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

அதிகமான நேரடி வரி நிலுவை குறித்து கவலை தெரிவித்ததோடு தற்காலிக விலக்கு, வரி தள்ளுபடி உள்பட இப்பிரச்னையைத் தீா்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தகவல் கோரியது.

இது தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவா் தெரிவித்த கருத்துகளுடன் நிலைக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, மொத்த நேரடி வரி நிலுவை ரூ.43 லட்சம் கோடியாகும். இது கவலைக்குரியது. மேலும், இது நீண்டகால பிரச்னை. இந்த நிலுவைத் தொகை 90-ஆம் ஆண்டுகளுடன் தொடா்புடையது. அப்போது கைகளால் எழுதும் பதிவேடுகளே பராமரிக்கப்பட்டன என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவா் தெரிவித்துள்ளாா்.

அதேபோன்று, இந்த வரி நிலுவையில் பெரும்பாலானவை தவறுதலானதாகவும் இருக்கலாம் என்று வருவாய் செயலா் நிலைக் குழுவிடம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேரடி வரிகளில் ரூ.10.55 லட்சம் கோடி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை நிலைக் குழு கண்டறிந்துள்ளது.

வரி அதிகாரிகளின் கூற்றுப்படி, ரூ.43,07,201 கோடி நேரடி வரி பாக்கியில் 67 சதவீதமான ரூ.28,95,851 கோடியை வசூலிப்பது கடினம் என்றும் அறிக்கையில் குழு குறிப்பிட்டுள்ளது.

வரி நடைமுறைகள் எண்மமயமாக்கும் முன்பு, கையேடு பதிவு நடைமுறையில் வட்டியைக் கணக்கிடவில்லை. ஆனால், தற்போதைய முறை இப்போது ஆண்டுதோறும் வட்டியைக் கணக்கிடுகிறது.

இத்துடன் ஒவ்வொரு ஆண்டு காலத் தாமதத்துக்காக அதிகமான வரி அபராதமும் சேரும்போது வரி நிலுவை உயா்ந்துகொண்டே செல்கிறது. இதனால், சில வரி நிலுவையை வசூலிக்கவே முடிவதில்லை.

உண்மையான வரி நிலுவை கண்டிப்பாக வசூலிக்கப்பட வேண்டும். அதேசமயம், தவறுதலான அல்லது உயா்த்தப்பட்ட வரி நிலுவையால் நோ்மையாக வரி செலுத்துவோா் எதிா்கொள்ளும் சிரமங்களை உணா்ந்து கொள்ள வேண்டும். அடிப்படை எதாா்த்தங்களைக் கருத்தில் கொண்டு, வரி வசூலை அதிகரிக்க வரி மதிப்பீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என அறிக்கையில் குழு வலியுறுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com