
தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் புள்ளி விவரங்களை வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாகவும் கொலைகள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டை எழுப்பினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
”தமிழகத்தில் நேற்று 4 கொலைகள் நடைபெற்று இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கோவை சம்பவம் முதல்கட்டமாக தற்கொலை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரை சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன.
சிவகங்கையில் குடும்பத் தகராறு காரணமாக கொலை நடைபெற்றுள்ளது. ஈரோடு சம்பவத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவலர்கள் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். காவல்துறையின் விசாரணை நடந்து வருகின்றது.
தமிழக சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு, குற்றவாளி யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எவ்வித பாரபட்சமும் காட்டப்படுவதில்லை.
தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கூலிப் படைகளை கண்காணித்து கைது செய்யப்படுகின்றனர், தேவையான நேரங்களில் குண்டர் சட்டமும் பதியப்படுகிறது.
கடந்த 2024 மட்டும் 4,572 சமூக விரோதிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை காரணமாக 2023ஆம் ஆண்டில் 49,280 கொலை, கொள்ளை குற்றங்கள் நடந்த நிலையில், 2024ஆம் ஆண்டுல் 31,498 ஆக குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் 17,782 குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
சில கொலை குற்றங்கள் நடைபெறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகும்போது, அதிக குற்றங்கள் நடப்பதை போன்று, திட்டமிட்டு பரப்பப்படுகிறது. உண்மையில் எண்ணிக்கை அடிப்படையில் 6 சதவிகிதம் கொலைகள் குறைந்துள்ளன. பழிக்குப் பழி கொலைகளும் 42 சதவிகிதம் குறைந்துள்ளன.
2023ஆம் ஆண்டில் 181 மற்றும் 2024-ல் 242 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
2012 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற கொலைகள் ஆண்டு வாரியாக ஒப்பிட்டு பார்க்கையில், அதிமுக ஆட்சியில் 2012-ல் 1,943 கொலைகள், 2013-ல் 1,927 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் 2024ஆம் ஆண்டில்தான் மிகக் குறைவாக 1,540 கொலைகள் மட்டுமே நடைபெற்றுள்ளன” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.