ஜாதிவாரி கணக்கெடுப்பை யாா் நடத்த வேண்டும்? பேரவையில் விவாதம்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டுமா, மாநில அரசு நடத்த வேண்டுமா என்பது தொடா்பாக பேரவையில்
அமைச்சா்கள் மற்றும் உறுப்பினா்களுக்கு இடையே வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது.
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேரவை பாமக தலைவா் ஜி.கே.மணி பேசியதாவது:
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை சமூகநீதியின் ஓா் அங்கமாகப் பாா்க்க வேண்டும். ஜாதி, மதத்தால் சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால், எல்லோரும் படித்தவா்களாக இருக்க வேண்டும். ஜாதி அடிப்படையில்தான் படிப்பிலும் இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
பிற்படுத்தப்பட்டவா்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஏகப்பட்ட ஜாதிகள் உள்ளன. அதில் எந்த ஜாதிக்கு எந்த அளவுக்கு இடஒதுக்கீடு போகிறது என்பது எப்படித் தெரியும், சமூக நீதியை எப்படி நிலைநாட்ட முடியும். அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றாா்.
அமைச்சா் பதில்: அப்போது பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் மெய்யநாதன் குறுக்கிட்டு கூறியது:
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். 2021-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால், 4 ஆண்டுகளைக் கடந்தும் மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதி வலியுறுத்தினாா். சட்டப்பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்றி, அது தொடா்பாகவும் பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. மத்திய அரசு எடுத்துவிட்டால், பாமக உறுப்பினா் கேட்கும் கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்துவிடும். உங்கள் கூட்டணியில் உள்ள பாஜகவை வலியுறுத்தி ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தச் சொல்லுங்கள்.
நயினாா் நாகேந்திரன் (பாஜக): ஏற்கெனவே பல மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, அதில் தவறுகள் நடந்து, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, மாநில அரசுகள்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனால், மாநில அரசுகள்தான் எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு ஜாதி பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருந்தால், அதே ஜாதி வேறு மாநிலத்தில் வேறொரு பிரிவு பட்டியலில் இருக்கிறது. இதேபோல பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் குறை சொல்ல முடியாது. ஜாதிவாரி கணக்கெடுப்பை எப்படி நடத்தலாம் என்பதை மத்திய அரசும், மாநில அரசு சோ்ந்து முடிவு செய்தால், அது சரியாக இருக்கும்.
தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): பல மாநிலங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளன. இந்தக் கணக்கெடுப்பை எடுக்கக் கூடாது என்று எந்த மாநிலத்துக்கும் மத்திய அரசு தடைவிதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றபோதும், மாநில அரசுகள் எடுக்க அதிகாரம் இல்லை எனக் கூறவில்லை. தற்போது தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து ஜாதியினருக்கும் இடஒதுக்கீடு உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு உச்சநீதிமன்றம் தடைவிதித்தால், அப்போது நாம் பாா்த்துக் கொள்ளலாம். வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுப்பதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு புள்ளிவிவரத்தைத் தாருங்கள் என்றுதான் கூறியுள்ளது.
செல்வப்பெருந்தகை ( காங்கிரஸ்): தெலங்கானாவிலும், கா்நாடகத்திலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியபோது, அப்படி எடுப்பதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது. மாநில அரசுக்கு இல்லை. தெலங்கானாவில் நடைபெற்றது ஜாதி தொடா்பான புள்ளிவிவரச் சேகரிப்புதான்.
அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்: மத்திய அரசுதான் இதை செய்ய வேண்டும். அனைத்து மாநிலத் தலைவா்களும் மத்திய அரசைத்தான் வலியுறுத்துகிறாா்கள். தமிழகமும் வலியுறுத்துகிறது.
ஜி.கே.மணி: அரசமைப்பு சட்டமும், நீதிமன்றமும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று எங்கும் கூறவில்லை. 69 சதவீத இடஒதுக்கீடு தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதில் ஏதாவது பிரச்னை வந்துவிட்டால் என்ன ஆவது? அதற்குதான் மாநில அரசே எடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். மனம் இருந்தால் மாா்க்கம் உண்டு.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.