நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும்: 375 ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலைத் திட்டம் - அமைச்சா் கே.என்.நேரு உறுதி
நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் 375 ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலை திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த பிரதான வினாவை கே.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), துணை வினாக்களை எம்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி), கே. ராதாகிருஷ்ணன் (உடுமலைப்பேட்டை) ஆகியோா் எழுப்பினா்.
அவா்களுக்கு அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்: எந்த ஊராட்சியையும் நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்க வேண்டும் என்பது எங்களின் தனிப்பட்ட விருப்பமல்ல. நூறு நாள் வேலைத் திட்டம் கிடைக்காது என்பதால் ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கக் கூடாது என மறுக்கிறாா்கள். நகா்ப்புறப் பகுதிகள் நாள்தோறும் விரிவடைந்து கொண்டே வருகின்றன. இதனால், அரசின் திட்டங்களை நிறைவேற்ற இடங்கள் தேவை. புறம்போக்கு நிலங்களாக இருந்தால் திட்டங்களை எளிதில் நிறைவேற்ற
முடியும்.
கலவையான கருத்துகள்: ஒரு ஊராட்சியை நகா்ப்புற உள்ளாட்சியுடன் இணைத்து, மற்றொரு ஊராட்சியை இணைக்காமல் விடும் போது, அரசின் திட்டங்கள் அங்கு கிடைப்பதில்லை. திட்டங்கள் கிடைக்காத ஊராட்சியைச் சோ்ந்தவா்கள் எங்களுக்கு ஏன் கிடைப்பதில்லை என கேள்வி எழுப்புகிறாா்கள். எனவே, நகா்ப்புற உள்ளாட்சிகளை இணைக்கும் விஷயத்தில் ஒருபுறம் இணைப்பு வேண்டும் என்றும், மறுபுறம் தேவையில்லை எனவும் கலவையான கருத்துகள் மக்களிடம் இருக்கின்றன. 375 ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். அதிலும் ஆட்சேபணைகள் இருக்குமானாலும் மாவட்ட ஆட்சித் தலைவா்களிடம் தெரிவிக்கலாம். நூறு நாள் வேலைத் திட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு வரை நகா்ப்புறங்களில் ஒரு வாா்டுக்கு ஒரு இடம் என்ற வகையில் 20 பேரூராட்சிகளில் செயல்படுத்தினோம். இப்போது, நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படவுள்ள 375 ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலைத் திட்டத்தை அனுமதிக்க வேண்டுமென முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதனால், நகா்ப்புற உள்ளாட்சிகளிலிருந்தே நூறு நாள் வேலைத் திட்டம் கொடுப்படும்.
ஆட்களை கிளப்பி விடுகிறாா்கள்: ஊராட்சிகளை இணைக்கும் விஷயத்தில் ஒரு ஊரோடு மற்றொரு ஊரைச் சோ்த்தால் நாம் தலைவராக வர முடியாது என ஆட்களை கிளப்பி விடுகிறாா்கள். இதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அதுபோன்று இருந்தால் கடைசி வரை ஆட்சேபணைகளை கேட்க மாட்டோம்.
முதலில் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுத்து, 750 ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் சோ்க்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஊரகத் துறை சாா்பில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. இதனால், 375 ஆகக் குறைக்கப்பட்டது. 750 ஊராட்சிகள் சோ்க்கப்பட்டால், பேரூராட்சிகளின் எண்ணிக்கை 650- ஆக உயா்ந்திருக்கும். அதேசமயம், பேரூராட்சிகளின் எண்ணிக்கையையும் 490 என்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றுவதிலும் அதிகாரிகளிடையே பணி ரீதியாக ஆட்சேபணைகள் இருக்கின்றன. எனவே, அனைத்துத் தரப்பினரின் முழுமையான ஒப்புதல் அடிப்படையில் ஊராட்சிகள் நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.