திண்டுக்கல் காசம்பட்டி கோயில் காடுகள், பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிப்பு!

திண்டுக்கல் காசம்பட்டி கோயில் காடுகள் பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசால் அறிவிப்பு.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on
Updated on
2 min read

திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி (வீர கோவில்) கோயில் காடுகளை, பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திண்டுக்கல் வனப்பகுதியில் அழகர்மலை காப்புக்காடுக்கு அருகில் அமைந்துள்ள காசம்பட்டியை உயிரிய பன்முகச் சட்டம் 2002-ன் கீழ் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்து, அரசிதழில் இதற்கான அறிவிப்பை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ளது.

இது தமிழ்நாட்டில் அறிவிக்கப்படும் இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தலமாகும். இதன் அடையாளமாக வனம் மற்றும் கதர்த் துறை திண்டுக்கல் இன்று 27.03.2025 தலைமைச் செயலகத்தில் காசம்பட்டி (வீர கோவில்) பல்லுயிர் பாரம்பரிய தலம் பற்றிய குறும்படத்தினை வெளியிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, 2022 ஆம் ஆண்டில் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா, ரெட்டியபட்டி பஞ்சாயத்து, காசம்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள வீர கோவில் ஒரு கோயில் காடுகள். 4.97 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த கோயில் காடுகள் இன்றும் காலத்தை வென்று நிலை கொண்டுள்ளது. இந்தக் காடுகளைச் சுற்றிலும் உள்ள பசுமையான மாந்தோப்புகள் இயற்கை அழகையும், வளத்தையும் மேலும் மெருகூட்டுகிறது. வன விலங்குகளைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை எய்த உதவும் வகையில் ஒரு பாலமாக இது விளங்குகிறது.

இதன் ஆன்மீக முக்கியத்துவத்திற்கு அப்பால், சுற்றுச்சூழலில், கோயில் காடுகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. இது பல்லுயிரியலைப் பாதுகாக்கிறது மற்றும் உள்ளூர் காலநிலையை ஒழுங்குபடுத்துகிறது. வீர கோவில் கோயில் காடுகளில் உள்ளூர் தெய்வமான “வீரணன்” குடிகொண்டுள்ளதால் உள்ளூர் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

இந்த காடுகள் பல்லுயிர் பன்முகத் தன்மையின் முக்கிய இடமாகும். இக்காடுகள் 48 தாவர இனங்கள், 22 புதர்கள், 21 கொடிகள் மற்றும் 29 மூலிகைகள் உட்பட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் குறிப்பிடத்தக்க பல்லுயிர்களின் தாயகமாகும், இது காடுகளின் பாரம்பரிய செழுமைக்கு பங்களிக்கிறது.

இப்பகுதியில் 12-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், பல்வேறு சிறிய பாலூட்டிகள், ஊர்வன மற்றும் எண்ணற்ற பூச்சிகள் போன்ற அனைத்தும் இந்த பாதுகாக்கப்பட்ட சூழலில் செழித்து வளர்கின்றன. இது பாரம்பரிய பன்முகத் தன்மையின் கருவூலமாகவும் செயல்படுகிறது, சுற்றுச்சூழலின் மீள்தன்மை மற்றும் தழுவலுக்கு பங்களிக்கும் பல்வேறு வகையான தாவர இனங்கள் உள்ளன. இந்த மரபணு வளம் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தல் மற்றும் மண் வளத்தை அதிகரிப்பதன் மூலம், மாந்தோப்புகள் உட்பட சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உள்ளது.

இந்த பாரம்பரிய தலத்தின் செழுமையான பன்முகத் தன்மை, கலாசார முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புடன், காசம்பட்டி (வீர கோவில்) கோயில் காடுகள் பாதுகாப்பு மற்றும் நிலையான பாரம்பரியத்தின் முன்மாதிரியாக உள்ளது. மரபியல் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதில் அதன் முக்கியப் பங்கைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு காசம்பட்டி (வீர கோவில்) கோயில் காடுகளை 2002 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்து, அதன் பாதுகாப்பை தலைமுறைகளுக்கும் உறுதி செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com