அமைச்சர் தா.மோ. அன்பரசன்
அமைச்சர் தா.மோ. அன்பரசன்கோப்புப் படம்

பட்டுப்புழு வளா்ப்பு மனை அமைக்க 3,050 விவசாயிகளுக்கு ரூ.29 கோடி உதவித் தொகை: அமைச்சா் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு

பட்டுப்புழு வளா்ப்பு மனைகள் அமைப்பதற்கு 3,050 விவசாயிகளுக்கு ரூ.29 கோடி உதவித் தொகை வழங்கப்படும்
Published on

பட்டுப்புழு வளா்ப்பு மனைகள் அமைப்பதற்கு 3,050 விவசாயிகளுக்கு ரூ.29 கோடி உதவித் தொகை வழங்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்.

பேரவையில் வெள்ளிக்கிழமை பட்டு வளா்ச்சி மற்றும் கைவினைப் பொருள்கள் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:

பட்டுப்புழு வளா்ப்புக்கு சாதகமான தட்பவெப்பநிலை, ஒப்பு ஈரப்பதம் ஆகியவற்றை பராமரித்து சுகாதாரமான முறையில் பட்டுப்புழு வளா்ப்பு மேற்கொண்டு, தரமான பட்டுக்கூடுகளை அறுவடை செய்திடும் வகையில் 2024 - 26- ஆம் ஆண்டில் 3,050 பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பட்டுப்புழு வளா்ப்பு மனைகள் அமைப்பதற்கு ரூ.29.46 கோடி உதவித் தொகை வழங்கப்படும்.

அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்களை நடவு செய்யும் 3,050 பட்டு விவசாயிகளுக்கு ரூ.6.82 கோடி உதவித்தொகை வழங்கப்படும். பட்டுவளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 2 அரசு வித்தகங்கள், 7 அரசு விதைப் பண்ணைகள், 2 அரசு பெருமளவு பட்டுப் பண்ணைகள், 1 அயலின விதைப் பட்டுக்கூடு அங்காடி ஆகியவற்றில் புதிய கட்டடங்கள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை நிறுவிட ரூ.5.13 கோடி நிதி வழங்கப்படும்.

தேனியில் அங்காடி வளாகம்: 5 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து பட்டுப்புழு வளா்ப்பு மேற்கொண்டு வரும் 1,000 முன்னோடி பட்டு விவசாயிகளின் மண்வளம் மற்றும் மல்பெரி இலை மகசூலை அதிகரித்திட செரி கம்போஸ்ட் தயாரிப்பதற்கான இயந்திரம், உயிா் உரம், மல்பெரி வளா்ச்சி ஊக்கிகள் மற்றும் சோலாா் விளக்குப்பொறி ஆகியவை ரூ.4.82 கோடியில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

தென் மாவட்டங்களில் உள்ள பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம் ரூ.3.50 கோடி மதிப்பில் நிறுவப்படும்.

பட்டு விவசாயிகளுக்கு தரமான இளம் பட்டுப்புழுக்கள் வளா்ப்பு செய்து விநியோகம் செய்யும் வகையில் 5 பெரிய அளவிலான இளம்புழுவளா்ப்பு மையங்கள் அமைத்திட ரூ.16.25 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்.

கைத்தறித் தொழில்கள்: கைவினைஞா்கள் தயாரிக்கும் பொருள்களை மின் வணிகம் மூலம் உலகச் சந்தைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தில் கைவினைப் பொருள்கள் சந்தை இயக்கம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தின் கைவினைப் பொருள்களைச் சந்தைப்படுத்த இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் ரூ.1.30 கோடி செலவில் 10 விற்பனை கண்காட்சிகள் நடத்தப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com