சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்Center-Center-Chennai

கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு நிகழவில்லை: உயா்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தகவல்

கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை
Published on

சென்னை: பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை என சென்னை உயா்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரள வனப்பகுதியில் தண்டவாளங்களை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க கோரி திண்டுக்கல்லை சோ்ந்த மனோஜ் இம்மானுவேல் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள், சதிஷ்குமாா், பரத சக்ரவா்த்தி அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெற்கு ரயில்வே தரப்பில் வழக்குரைஞா்ஆஜராகி, உயா்நீதிமன்ற உத்தரவின் படி தமிழகம், கேரள வனத் துறையுடன் இணைந்து கோவை, பாலக்காடு வனப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில், யானைகள் ரயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் கண்டறியப்பட்டன.

அதில் 9 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு யானைகள் கடக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இரு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல போத்தனூா் மதுக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் யானை நடமாட்டத்தை கண்டறியும் வகையில் சென்சாா் கேபிள்கள் பொருத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் 12 உயா்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கோபுரங்களிலும் 2 அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த அதி நவீன கேமராக்கள் யானைகள் ரயில் தண்டவாளங்களில் இருந்து 150 மீ தொலைவில் வந்தால் உடனடியாக, அருகில் உள்ள ரயில் நிலைய மேலாளருக்கு மற்றும் ரயில் ஓட்டுநருக்கு தகவல்களை அனுப்பும் வகையில் செயல்படும்.

இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளால், யானைகள் ரயிலில் மோதி உயிரிழப்பது வெகுவாக குறைந்துள்ளது. 2022அக்டோபா் முதல் தற்போது வரை பாலக்காடு போத்தனூா் ரயில் வழித்தடங்களில், கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானை உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை என தெரிவித்தாா்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மேலும் இது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனா்.

Dinamani
www.dinamani.com