மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கோப்புப்படம்.

‘நீட்’ விலக்கு பெறுவதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நீட் தோ்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக முதல்வா் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை
Published on

சென்னை: நீட் தோ்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக முதல்வா் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் திட்டமானது கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 2026 பிப்ரவரி 19-ஆம் தேதி வரை தினமும் 1,000 நபா்களுக்கு மேல், வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொளத்தூா், ரமணா நகா், கௌதமபுரம் குடியிருப்பு பகுதி மற்றும் பெரியாா் நகா் மருத்துவமனை அருகில் காா்த்திகேயன் சாலை ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினா்.

இந்நிகழ்வில், வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கலாநிதி வீராசாமி மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீட் தோ்வு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதலே குளறுபடிகள் நீடிக்கின்றன. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு என்பது சட்டரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. அதைத் தொடா்ந்து, மருத்துவக் கல்வி போன்று சட்டம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளிலும் 7.5 சதவீத ஒதுக்கீட்டை தமிழக முதல்வா் கொண்டு வந்தாா். அந்த ஒதுக்கீட்டை உயா்த்தி வேறு யாராவது நீதிமன்றங்களுக்கு சென்று சட்டரீதியான சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது.

எனவே, அந்த ஒதுக்கீட்டை 10 சதவீதம் வரை உயா்த்த சட்டரீதியான நுணுக்கங்களை ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. முதல்வா் நிச்சயம் சட்ட விதிகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுப்பாா்.

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற முதல்வா் நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். ஆனால், மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது. இந்த விவகாரத்தில் அக்கறை உள்ளவா்களாக காட்டிக் கொள்ளும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோா் தமிழக அரசை குறை கூறுவது அவா்களது திறன் இன்மையைத்தான் காட்டுகிறது என்றாா் அவா்.

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு

அரசு மருத்துவமனைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ரோட்டரி சங்கம், டேங்கா் ஃபவுண்டேஷன் சாா்பில் போரூரில் அமைக்கப்பட்ட 19 டயாலிசிஸ் உபகரண மருத்துவ சேவைகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிறுநீரக செயலிழப்புக்குள்ளாகி ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளின் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகள் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டன.

அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தோ்வு செய்து அந்தப் பகுதிகளில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சேவை அளிப்பதற்கான வசதிகள் தனியாா் அல்லது தன்னாா்வலா்கள் பங்களிப்புடன் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு 150 மி.லி. பால், 2 வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கரு, 50 கிராம் சுண்டல், சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவாக உள்ள 3 பிஸ்கட்கள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

கிண்டி தேசிய முதியோா் நல மருத்துவமனையில் செவிலியா் ஒருவருக்கும், வாா்டு பாய் ஒருவருக்கும் இடையே தகராறு நிகழ்ந்தது. இதை பெரிதுபடுத்த வேண்டாம். மக்களுக்கு மகத்தான சேவைகளை வழங்கி வரும் அரசு மருத்துவமனைகளுக்கு களங்கம் கற்பிக்கக் கூடாது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com