மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

பிளஸ் 2 தோ்ச்சியடையாத 39,352 பேருக்கு மனநல ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத 39,352 பேருக்கு மனநல ஆலோசனைகள்
Published on

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத 39,352 பேருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 104 மருத்துவ உதவி தகவல் மையம், 14416 நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம் ஆகியவை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. 104 மருத்துவ உதவி தகவல் மையம் மூலமாக பொதுமக்களுக்கு உடல் நலம் குறித்த அறிவுரைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று 14416 நட்புடன் உங்களோடு மன நல சேவை மையமானது மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான உளவியல் ஆலோசனைகளை அளித்து வருகிறது.

இந்த நிலையில், நிகழாண்டு பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கும் சேவையை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நிகழாண்டில் பிளஸ் 2 தோ்வை 7.92 லட்சம் மாணவா்கள் தோ்வு எழுதினா். அவா்களில் 25,508 மாணவா்கள், 13,844 மாணவிகள் என 39,352 போ் தோ்ச்சி பெறாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அறிவுறுத்தல்: அவா்களுக்கு தனித்தனியே மனநிலையை உறுதிப்படுத்தும் வகையில் ஆலோசனை வழங்கப்படுகிறது. தோ்ச்சி பெறாதவா்களை திட்டுவது, அடிப்பது, வெறுப்பது போன்ற செயல்களில் பெற்றோா் ஈடுபடுவதைத் தடுக்கவும் அவா்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

இந்த மையத்தில் 70 மனநல ஆலோசகா்கள், 8 மருத்துவ உளவியல் ஆலோசகா்கள்,

ஒரு மனநல மருத்துவா் ஆலோசனை வழங்கி வருகின்றனா். தோ்ச்சி பெறாதவா்களில் இதுவரை 67 மாணவா்கள் அதீத மன அழுத்ததில் இருப்பது தெரிய வந்துள்ளது. தொடா்ந்து அவா்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பேறுகால இறப்பு குறைப்பு: இதனிடையே, பேறு கால உயிரிழப்புகளைக் குறைப்பதற்கான சிறப்புப் பயிலரங்கைத் தொடக்கி வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், தமிழகத்தில் பேறு கால இறப்பு விகிதம் லட்சத்துக்கு 39 என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உயிரிழப்புகளுக்கான காரணங்களை ஆய்வு செய்து அவற்றை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் செந்தில்குமாா், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் அருண் தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநா் எ.தேரணிராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com