
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை என்பதை சிபிஐ வழக்குரைஞர் குறிப்பிட்டுள்ளார்.
அடித்துத் துன்புறுத்தும்போது அண்ணா அடிக்காதீங்கண்ணா என்று பெண்கள் எழுப்பிய ஒலி, செய்தி ஊடகங்களில் ஒலித்தபோது, ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்துபோனது. இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்தபோது பாதிக்கப்பட்ட பெண்கள் விசாரணைக்கு வரவில்லை. ஆனால், விடியோக்களில் பதிவான பெண்களின் அடையாளங்களைக் கண்டுபிடித்து, சிபிஐ, அவர்களைத் தேடி, அவர்களுக்கு மன ரீதியிலான ஆலோசனைகளை வழங்கி, அடையாளங்கள் ரகசியம் காக்கப்படும் என உறுதி அளித்த பிறகே அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைத்தனர்.
இதில் சுமார் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு சாட்சியங்களாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் சிறப்பம்சமே, ஒரு சாட்சி கூட விசாரணை முடியும்வரை பிறழ் சாட்சியாக மாறவில்லை. பெண்கள் அனைவரும் தைரியமாக, சுதந்திரமாக கடைசி வரை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தனர் என்று அரசு தரப்பு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு, அரசு தரப்பில் இழப்பீடும் கோரப்பட்டுள்ளதாக சுரேந்திர மோகன் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளிடம் பழகி, பாலியல் வன்கொடுமை செய்து, அதனை விடியோ படமெடுத்துக் காட்டி மிரட்டி, தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தபோது, தமிழகத்தையே உலுக்கியது.
இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், அருளானந்தம் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 12 மணிக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் வெளியாகவிருக்கிறது.
குற்றவாளிகள் திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களின் லேப்டாப்பில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் 100-க்கும் மேற்பட்ட விடியோக்கள் இருந்தன. இதனை வைத்து பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியன் வன்கொடுமை செய்திருக்கிறார்கள் என்பதும், குற்றவாளி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் பெண்களை வன்கொடுமை செய்தது சிபிஐ விசாரணயில் தெரிய வந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.