
தமிழ்நாட்டில் குழந்தைகளின் இறப்பு விகிதம் பற்றிய தினமணி தலையங்கம் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து வருவது பற்றி 'தமிழகம் பெருமைப்படலாம்' என்ற தலைப்பில் இன்றைய தினமணி தலையங்கம் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் இது குழந்தைகளின் நலன் மீதான அரசின் அக்கறையைக் காட்டுவதாகவும் இதற்கு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் குழந்தைகள் நலத் திட்டங்கள் முக்கிய காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022-23 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,000 பிறப்புகளுக்கு 10.9 சதவீதமாக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம், 2023-24-ஆம் ஆண்டு 8.9 சதவீதமாகவும் அதுவே 2024-25-ஆம் ஆண்டில் 8.2 சதவீதமாகவும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய் - சேய் சுகாதாரக் குறியீடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்ததில் தமிழகத்தின் பங்கும் இருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணியின் இந்தத் தலையங்கத்தைப் பகிர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஒரு தாய்மார் கருவுற்ற காலம் முதல், அவர் பெற்ற குழந்தை பள்ளி, கல்லூரி செல்லும் வரை ஒவ்வொரு நிலையிலும் பார்த்துப் பார்த்து அக்கறையுடன் அத்தனை தேவையையும் நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசு பாடுபடுவதற்கான பயனும் பாராட்டும் இதோ!
பெருமை கொள்கிறேன்... ஊக்கம் பெறுகிறேன்!!" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | தினமணியின் தலையங்கம் - தமிழகம் பெருமைப்படலாம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.