தமிழகத்தில் இன்று வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்
தமிழகத்தில் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (மே 15) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பகல் நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், பரமத்தி வேலூா், திருச்சி - தலா 104.9, திருத்தணி - 104.18, வேலுா் - 104.36, மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டை - தலா 104, மதுரை நகரம் - 103.28, பாளையங்கோட்டை - 103.82, தஞ்சாவூா் -102.2, சேலம் - 101.48, சென்னை மீனம்பாக்கம் -100.08 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (மே 15) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
கீழடுக்கு சுழற்சி: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வியாழக்கிழமை (மே 15) முதல் மே 20-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை: மே 15-இல் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மே 16-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூா், அரியலூா், பெரம்பலூா், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 15-இல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

