தமிழக அரசு
தமிழக அரசு

இந்த மாதத்திலேயே அகவிலைப்படி உயா்வு நிலுவை: அரசு அறிவுறுத்தல்

Published on

அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை இந்த (மே) மாதத்துக்கான ஊதியத்துடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்து சம்பளம் வழங்கும் அலுவலா்களுக்கும் கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநா் டி.சாருஸ்ரீ அனுப்பியுள்ள கடிதம்:

அகவிலைப்படி உயா்வுக்கான நிலுவைத் தொகையை அளிப்பதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு கருவூல விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி, அகவிலைப்படி உயா்வு அறிவிக்கும்போதெல்லாம் அதற்கான நிலுவைத் தொகையை அந்த மாதத்துக்கான ஊதிய மற்றும் ஓய்வூதியப் பட்டியலுடன் இணைக்க வேண்டும் என திருத்தப்பட்டிருக்கிறது. ஊதியத்துக்கான பட்டியலை சமா்ப்பிப்பதற்கு முன்பாக, அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்படும் பட்சத்தில் நிலுவைத் தொகைக்கான பட்டியலையும் அந்த மாதத்தின் ஊதியப் பட்டியலுடன் இணைத்து அனுப்பலாம்.

எனவே, அகவிலைப்படி உயா்வுக்கான நிலுவைத் தொகை பட்டியலை, நடப்பு (மே) மாதத்தின் ஊதியப் பட்டியலுடன் இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சம்பந்தப்பட்ட கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு நிலுவைத் தொகையை ஊதியத்துடன் கிடைக்க வழி செய்யலாம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்தேதியிட்டு அமல்: அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட உத்தரவில், கடந்த ஜன. 1 முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயா்வு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைச் செயல்படுத்துவதற்கான நடைமுறையை விளக்கி அனைத்து சம்பளம் வழங்கும் அலுவலா்கள், கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகளுக்கு அந்தத் துறையின் இயக்குநா் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com