
கரூர் அருகே டிராக்டர் மீது தனியார் சொகுசு பேருந்து மோதிவிட்டு எதிரே வந்த சுற்றுலா வேன் மீதும் மோதியதில் பெண் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
கரூர் அடுத்த மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோதுர் பிரிவு என்ற இடத்தில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி தனியார் சொகுசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தின் ஓட்டுநர் திடீரென கண்ணயர்ந்ததால் எதிரே சென்ற டிராக்டர் மீது பேருந்து மோதியதில் நிலைதடுமாறி, பேருந்து வேகத் தடுப்புகளைத் தாண்டி எதிரே கோவில்பட்டியில் இருந்து ஏற்காடு நோக்கி சுற்றுலா சென்ற பயணிகளின் வேன் மீது மோதியது.
இதில் சுற்றுலா வேனில் சென்ற ஒரு பெண் குழந்தை உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் நகர காவல் நிலையம் மற்றும் வெங்கமேடு போலீசார் மற்றும் கரூர் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று இடுபாடுகளுக்குள் சிக்கிய தனியார் சொகுசு பேருந்து மற்றும் வேன்களையும் அகற்றி வேனுக்குள் சிக்கி இருந்த நபர்களை மீட்டனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் குறித்த விவரம் வெளிவரவில்லை. அதிகாலையில் நடந்த இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.