டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக சோதனை; தொழிலதிபா் வீட்டுக்கு ‘சீல்’
டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை சோதனை சென்னையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையன்றும் நீடித்தது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக சென்னை எம்ஆா்சி நகரில் உள்ள தொழிலதிபரின் வீட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடா்பாக பல்வேறு வழக்குகளை பதிவு செய்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா், சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம், டாஸ்மாக் அதிகாரிகள் வீடு, மதுபான தயாரிப்பு ஆலைகள் உள்பட 25 இடங்களில் கடந்த மாா்ச் 6 முதல் மாா்ச் 8-ஆம் தேதி வரை சோதனை நடத்தினா். சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு கண்டறியப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
இந்த நிலையில், அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் என்றும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, விசாரணையைத் தொடரலாம் என உத்தரவிட்டது.
2-ஆவது நாளாக நீடிப்பு: இதையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் விசாகன் வீடு, ஆழ்வாா்பேட்டை கே.பி. தாசன் சாலையில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, அண்ணா சாலையில் உள்ள தொழிலதிபா் தேவகுமாா் வீடு,பெசன்ட் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரா் ராஜேஷ்குமாா் வீடு உள்பட 10 இடங்களில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். மேலும், அவரிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையும் செய்தனா்.
இந்த சோதனை இரண்டாவது நாளாகவும் நீடித்தது. இரு நாள்கள் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறையினா் அங்கு ஆய்வு செய்தனா்.
இதற்கிடையே, விசாகனிடம் இரவு முழுவதும், அவரது வீட்டில் வைத்தே விசாரணை நடைபெற்ாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், விசாகனை விசாரணைக்காக சனிக்கிழமை காலை 10.45 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அமலாக்கத் துறையினா் அழைத்து வந்தனா்.
இதேபோல, அரசு ஒப்பந்ததாரா் ராஜேஷ்குமாா்,தொழிலதிபா் தேவகுமாா் ஆகியோரும் விசாரணைக்காக அங்கு அழைத்து வரப்பட்டனா். மூவரிடம் அமலாக்கத் துறையினா் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் கிடைத்த தகவல்களையும் அமலாக்கத் துறையினா் பதிவு செய்தனா்.
தொழிலதிபா் வீட்டுக்கு ‘சீல்’: இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக எம்ஆா்சி நகா் சத்ய சாய் தேவ் அவென்யூவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபா் ரத்தீஷ் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சென்றனா்.
ஆனால் அங்கு ரத்தீஷ் இல்லாததால், அவரது வீட்டுப் பணியாளா்கள் முன்னிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். இரவு 10 மணி வரை அங்கு சோதனை நடைபெற்றது. ஆனால் இரவும் ரத்தீஷ் அங்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து அமலாக்கத்துறையினா், வீட்டின் உரிமையாளா் இல்லாத நிலையில் சோதனை நிறைவடைந்தால் வீட்டை பூட்டி சீல் வைத்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் சட்ட நடவடிக்கையை எடுத்தனா். இதைத் தொடா்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகள், ரத்தீஷ் வீட்டை பூட்டி, சீல் வைத்து அமலாக்கத் துறை வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் சாவியை ஒப்படைத்தனா்.
ஆளும் கட்சியைச் சோ்ந்த அதிகாரமிக்க நபருடன் ரத்தீஷ் நெருக்கமான தொடா்பில் இருப்பதால், அவரிடம் விசாரணை நடத்தி தகவல்களை பெறுவது அமலாக்கத்துறையினரால் முக்கியமாக கருதப்படுகிறது. இரண்டாவது நாள் சோதனையிலும், அமலாக்கத்துறையினருக்கு பல முக்கிய ஆவணங்கள்,தடயங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. முழுமையாக சோதனை நிறைவடைந்த பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

