சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது: பல்லடம் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு அம்பலம்!

சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார்.
ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார்.
Updated on
2 min read

சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி (72) - பாக்கியம் (63) ஆகியோர், பணம், நகைக்காக, கடந்த மாதம் 28-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பத்தே முக்கால் பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த கொலை வழக்கு குற்றவாளிகளைக் கைது செய்ய, மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில், ஈரோடு எஸ்பி சுஜாதா தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் திங்கள்கிழமை காலை ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகிரியை அடுத்த மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த ராமசாமி - பாக்கியம் தம்பதியினர் கொலை வழக்கு தொடர்பாக பழங்குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல், கண்காணிப்பு கேமரா பதிவுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் அறச்சலூர் வீரப்பம்பாளையத்தைச் சேர்ந்த ஆச்சியப்பன் (48) அறச்சலூர் தெற்கு வீதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (52), வீரப்பம்பாளையம் புதுக்காலனியைச் சேர்ந்த ரமேஷ் (54) ஆகிய மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராமசாமி - பாக்கியம் தம்பதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் 28ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல், இரு சக்கர வாகனத்தில் மூவரும் ராமசாமியின் தோட்டத்துக்கு வந்துள்ளனர். கரும்புக்காடு பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு, வீட்டின் அருகே மறைந்து இருந்துள்ளனர். அப்போது மின் தடை ஏற்படுத்தி, பாக்கியத்தை வீட்டில் இருந்து வெளியே வர வைத்துள்ளனர். வெளியே வந்த அவரை, மரக்கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர். சத்தம் கேட்டு வந்த ராமசாமியையும், மூவரும் கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர்.

பாக்கியம் அணிந்திருந்த பத்தே முக்கால் பவுன் நகையை பறித்துக் கொண்டு மூவரும் தப்பியுள்ளனர். திருடிய நகையை சென்னிமலை பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரிடம் கொடுத்து உருக்கியுள்ளனர். உருக்கப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 2ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கொலையாளிகளிடம் இருந்து அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம், கொலைக்கு பயன்படுத்திய மரக்கட்டை, கையுறை மற்றும் கொலையான ராமசாமியின் கைப்பைசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொலை நடந்த வீட்டில் இருந்த கால்தடங்களுடன், குற்றவாளிகளின் கால் தடங்களை ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி ஆச்சியப்பன் தேங்காய் உறிக்கும் பணி மற்றும் தோட்ட வேலை செய்வது போன்று தனியாக உள்ள தோட்டங்களுக்கு சென்று நோட்டமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் கொடுக்கும் தகவலின் படி, மற்ற இருவரும் இணைந்து, தனியாக வசிக்கும் வயதானவர்களைக் கொலை செய்து நகையைத் திருடியுள்ளனர். சிவகிரி கொலை சம்பவத்துக்கு முன்பாக 15 நாட்களுக்கு முன்பு இப்பகுதியை நோட்டமிட்டுள்ளனர். குற்றவாளிகள் மூவரின் மீதும், 2015 ஆம் ஆண்டு 5 வழக்குகள் இருந்துள்ளன. இந்த வழக்கில் இருந்து இவர்கள் விடுபட்டுள்ளனர்.

பல்லடம் கொலை: திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம், சேமலைக்கவுண்டன்பாளையத்தில் வசித்துவந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமாத்தாள் (74) மற்றும் அவர்களது மகன் செந்தில்குமார் (44) ஆகியோர் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஐந்தரை பவுன் நகை கொள்ளையாடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கிலும் தற்போது பிடிபட்ட குற்றவாளிகள் மூவருக்கும் தொடர்புள்ளது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருவதால், நீதிமன்றம் மூலம் இவர்களை காவலில் எடுத்து அந்த கொலை தொடர்பான விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். மேலும் ஈரோடு, திருப்பூர், கோவை பகுதியில் நடந்த குற்றச் சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் குற்றச் சம்பவத்தில் ஈடுபடும் போது போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை.

இதுபோன்ற குற்றச் சம்பவம் மேலும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தீவிர பகல் மற்றும் இரவு ரோந்துகள், 35 இருசக்கர வாகன ரோந்து, 3 நான்கு சக்கர வாகன ரோந்து மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் கரையோர பகுதிகளில் ஆயுதம் தாங்கிய 21 ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்

சிக்கியது எப்படி? கொலையாளிகளைப் பிடிக்க கண்காணிப்பு கேமரா பதிவுகள் உதவியாக இருந்துள்ளது. கொலை நடந்த பகுதியில் இருந்து இரவில் ஒரு இருசக்கர வாகனம் சென்றதைக் கண்டறிந்த போலீஸார், அந்த வாகனம் எதுவரை சென்றது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் பழங்குற்றவாளிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த போது, கொலை குற்றவாளிகள் சிக்கியதாக தனிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com