நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியது பற்றி...
mk stalin in niti aayog meeting
நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்DIPR
Published on
Updated on
2 min read

மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வழங்க வேண்டும் என நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(சனிக்கிழமை) நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசிய விஷயங்கள் குறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத உரிமைப் பங்கை வழங்க வேண்டும் என்று நீதி ஆயோக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தேன். மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 41 சதவீதம் என்ற நிலையில் தற்போது 33.16 சதவீதத்தை மட்டுமே பெறுகிறோம்.

அம்ருத் திட்டத்தைப் போலவே, இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக இருப்பதால் நகர்ப்புற மேம்பாட்டுக்கான திட்டம் பற்றிய அவசியத்தை வலியுறுத்தினேன்.

கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தைப் போல, காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளையும் சுத்தம் செய்வதுடன் அதுதொடர்பான திட்டங்களுக்கு ஆங்கிலப் பெயர்களை வைக்க வேண்டும் என்று கூறினேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

niti aayog
நீதி ஆயோக் கூட்டத்தில் குழு புகைப்படம்.DIPR

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பேசியது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

1. கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி, பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்.

2. பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், எஸ்எஸ்ஏ நிதி மறுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.

3. தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.

இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக்கொள்வார்கள்.

4. நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். சிறந்த உள்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவை. இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் உருவாக்கிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com