
ஆம்பூர் அருகே அரசுப் பேருந்தும் லாரியும் திங்கள்கிழமை காலை, நேருக்கு நேர் மோதியதில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்து ஒன்று பேர்ணாம்பட்டிற்கு திங்கள்கிழமை காலை 5. 45 மணியளவில் புறப்பட்டது. பேரணாம்பட்டு சாலையில் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ராஜா இயக்கினார்.
பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் அருகில் உள்ள தோல் தொழிற்சாலை, ஷூ தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்காகச் சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் தனியார் கம்பெனி அருகே சென்றபோது எதிர்த்திசையில் பேர்ணாம்பட்டிலிருந்து ஆம்பூர் நோக்கி வந்த லாரி அதிவேகமாக பேருந்தின் மீது மோதியது .
இதில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. பேருந்தில் பயணித்த பயணிகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த உமரபாத் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த பெண்கள் உள்ளிட்ட பயணிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவர் சுவிதா கணேஷ், திமுக நிர்வாகி நவீன் குமார் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.
இடிப்பாடுகளில் சிக்கிய லாரி மற்றும் அரசுப் பேருந்தை ஜேசிபி உதவியால் அகற்றப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் பேர்ணாம்பட்டு சாலையில் கனரக வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவித்தன. அரசுப் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விபத்து நடந்த இடத்துக்கு சற்று முன்பே முன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.