
சென்னை: சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள ஏடிஎம் ஒன்றில், நூதன முறையில் பணத்தைத் திருடிய வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கி தலைமை அலுவலகத்துக்கு வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு துறை நிபுணர்கள், காவல்துறையினருடன் இணைந்து நடத்திய விசாரணையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும் பகுதியில், வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர், கருப்பு நிற அட்டையை ஒட்டிவைத்துள்ளனர்.
யாரேனும் பணம் எடுக்க ஏடிஎம் இயந்திரத்துக்கு வந்தால், பணம் வெளியே வராது. இதனால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுவிடுவார்கள். பிறகு, இவர்கள் உள்ளே சென்று, அந்த அட்டையை எடுத்துவிட்டு பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.
இதுபோல பல ஏடிஎம் இயந்திரங்களில் கருப்பு அட்டையை வைத்துக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்துக்குள் இருந்த சிசிடிவி கருவியில் பதிவான காட்சிகளை அலசி ஆராய்ந்தபோதுதான், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல் நூதன முறையில் கொள்ளையடிக்க திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு 3 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.