பேருந்துகளின் தரத்தை உயர்த்தாத திமுக அரசு! கட்டண உயர்வுக்கு பாஜக எதிர்ப்பு!
பேருந்து கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், கட்டண உயர்வுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பேருந்துகளுக்கான கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அரசிடம் தெரிவிக்கலாம் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
மக்களின் விருப்பங்களுக்கும் கருத்துகளுக்கும் இந்த ஆட்சியில் இதுவரை மதிப்பளிக்கப்பட்டுள்ளதா என்பது தான் இங்கே அடிப்படைக் கேள்வி. மக்களின் மனதுப்படி தான் இந்த ஆட்சி நடக்கிறது என்றால் தேசியக் கல்விக் கொள்கையை திமுக அரசு எப்போதோ ஏற்றுக் கொண்டிருக்கும்.
மேலும், மின்சாரக்கட்டணம், சொத்துவரி, தொழில்வரி, ஆவின்பால் விலை, முத்திரைக் கட்டணம் என தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் விலைவாசி மற்றும் வரி உயர்வால் விழி பிதுங்கி கிடக்கும் தமிழக மக்கள், பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயர்த்த ஒப்புக் கொள்வார்களா?
அரசுப் பேருந்துகளின் தரத்தை உயர்த்தாத திமுக அரசு, அதன் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதை மக்கள் எப்படி அனுமதிப்பார்கள்?
மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு திமுக அரசு செவி சாய்க்குமா என்ன? பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் தோள்களில் மீண்டும் சுமையை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கலாம் என்ற திமுக அரசின் கனவு ஒருநாளும் நிறைவேறாது, அதைத் தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே, பேருந்துக் கட்டண உயர்வு என்ற எளிய முடிவை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.