தமிழக அரசு
தமிழக அரசுகோப்புப்படம்

75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் 75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

துணை முதல்வா் உதயநிதியின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, மாநில அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதல்வரின் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என்று பேரவையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். இந்தத் திட்டம் பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய சிறு விளையாட்டு அரங்கங்கள் தலா ரூ.3 கோடியில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 75 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்வரின் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சா்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சோ்த்துள்ள 4,617 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.152.52 கோடியில் உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஊராட்சிகளில் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதை ஊக்குவிக்க, கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் 16,798 விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.100 கோடியில் விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

சா்வதேச மற்றும் பாரா ஒலிம்பிக் தேசியப் போட்டிகளில் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 104 விளையாட்டு வீரா்களுக்கு பொதுத்துறை, அரசுத் துறைகளில் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. நலிவடைந்த சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com