

சென்னை: சென்னை துறைமுகம் எண்ணூர் கடல் பகுதிக்கு ஒன்றாக வந்த நான்கு பெண்கள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனரா அல்லது தற்கொலை செய்துகொண்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெத்திகுப்பத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் தேவகிசெல்வம்(28). இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவருடன் அதே கடையில் பணியாற்றி வந்தவர்கள் கும்மிடிப்பூண்டி பாளையம் பகுதியை சேர்ந்த பவானி(19), கும்மிடிப்பூண்டி திருவல்லிகாலணி பஜனை கோயில் தெருவை சேர்ந்த காயத்ரி(17) மற்றும் இவர்களின் தோழியான கல்லூரி மாணவியான கும்மிடிப்பூண்டி கோபாலபுரம் ஜம்புலி காட்டு மேடு தெருவை சேர்ந்த ஷாலினி(18) ஆகிய 4 பேரும் சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள கடற்கரை வார்பு பகுதியின் மறைவான இடத்தில் குளிக்க சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் வார்பு பகுதிக்கு சென்று பார்த்தபோது 4 பேரும் சடலமாக மிதந்துள்ளனர்.
உடனடியாக சடலமாக இருந்த 4 பேரையும் மீட்டு சம்பவம் தொடர்பாக எண்ணூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை துணை ஆணையாளர் பாலாஜி, காவல் உதவி ஆணையாளர் வீரகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்கப்பட்ட உடல்களையும், சம்பவ இடத்தையும் ஆய்வு செய்தனர்.
அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்ட உடல்களை 108 ஆம்புலென்ஸ் வாகனங்களில் ஏற்றி உடல் கூறாய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பெண்களும் கடலில் விளையாடியபோது கடல் அலையில் சிக்கி ஒருவருக்கொருவர் காப்பாற்ற முயன்று உயிரிழந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொள்ள இப்பகுதிக்கு வந்து உயிரிழந்தார்களா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து பெரிய குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது, பொதுவாக கடல் பகுதிக்கு யாரேனும் வந்தால் கடலில் விளையாட கூடாது என எச்சரித்து அனுப்புவோம் ஆனால் அவர்கள் வார்பு பகுதியின் மறைவான இடத்திற்கு சென்றதால் அவர்கள் இருப்பதே யாருக்கும் தெரியவில்லை.
வார்பு பகுதியில் பார்த்தபோது உடல்கள் மிதப்பதுபோல இருந்ததால் உடனடியாக உடல்களை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தோம் என தெரிவிக்கின்றனர்.
எண்ணூர் பகுதியில் 4 பெண்கள் ஒரே நேரத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.