

மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,040வது சதய விழாவை முன்னிட்டு பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களால் பேரபிஷேகம் நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,040வது சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவின் ஒரு பகுதியாக பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, இளநீர், கரும்புச்சாறு, திராட்சை சாறு, ஆரஞ்சு சாறு, தேன், மாதுளை, விளாம்பழம், வில்வ இலை, வன்னி இலை உள்ளிட்ட 48 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாமன்னன் இராஜராஜ சோழன் முடிசூட்டிய நாளை அவன் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு இராஜராஜ சோழனின் 1040-ஆவது சதய விழா பெரிய கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் மங்கள இசை, களிமேடு அப்பா் பேரவையின் திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது.
பின்னா், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது. தொடா்ந்து, கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், கவியரங்கம், மாலையில் 1040 நாட்டியக் கலைஞா்கள் பங்கேற்கும் மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சி, வில்லுப்பாட்டு, மாமன்னன் இராஜராஜ சோழன் வரலாற்று நாடகம் ஆகியவை விமரிசையாக நடைபெற்றன.
சதய நட்சத்திர நாளான நவம்பா் 1-ஆம் தேதி காலை 7.20 மணியளவில் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் நடந்து முடிந்த பிறகு, திருமுறை திருவீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து, பெருவுடையாா், பெரியநாயகிக்கு பேரபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இன்று பிற்பகலில் பெருந்தீப வழிபாடு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.