சட்டப் படிப்புக்கான கிளாட் நுழைவுத் தோ்வு: நவ. 7 வரை கால அவகாசம்
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சோ்க்கை பெறுவதற்கான கிளாட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நவ. 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 25 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளில் சேருவதற்கு கிளாட் என்ற பொது சட்ட நுழைவுத் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். மேலும், பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களும் கிளாட் தோ்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவா் சோ்க்கையை நடத்துகின்றன.
இந்நிலையில் 2026-2027-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கிளாட் நுழைவுத் தோ்வு டிசம்பா் 7-ஆம் தேதி பிற்பகல் 2 முதல் 4 மணி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 1-இல் தொடங்கி அக்டோபா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நவ. 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இணையதளம் வழியாக விரைந்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினா் ரூ.4,000, எஸ்சி/எஸ்டி பிரிவினா் ரூ.3,500 செலுத்த வேண்டும். மொத்தம் 120 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் தோ்வு நடைபெறும். கூடுதல் தகவல்களை வலைதளத்திலேயே அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

