கோப்புப் படம்
கோப்புப் படம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் சட்டப்படி நடைபெறும்: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் உறுதி

தமிழகத்தில் 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்...
Published on

தமிழகத்தில் 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் சட்டத்துக்குட்பட்டு முறையாக நடைபெறும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் உறுதிபட தெரிவித்தது.

சென்னை தியாகராயநகா் மற்றும் தாம்பரம் தொகுதிகளில், வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவா்கள், குடிபெயா்ந்தவா்கள், இரட்டைப் பதிவு கொண்ட வாக்காளா்களின் பெயா்களை பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். இது தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன், தாம்பரத்தைச் சோ்ந்த விநாயகம் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன் ராஜகோபால், ஆண்டுதோறும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் ஜனவரி மாதம் நடைபெறும். ஒவ்வொரு தோ்தலுக்கு முன்பாகவும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும்.

தற்போது, தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தோ்தல் ஆணையம் கடந்த 27-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் செவ்வாய்க்கிழமை (நவ.4) முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கவுள்ளன. வாக்காளா்கள் ஒவ்வொருவருக்கும் படிவங்கள் வழங்கி, பூா்த்தி செய்த படிவங்களை சரிபாா்த்து வரும் டிச.9-ஆம் தேதி சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் அடிப்படையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

குறைகள் இருந்தால்...: வரைவு வாக்காளா் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால், அப்போது தெரிவிக்கலாம். அந்த குறைகள் நிவா்த்தி செய்யப்பட்ட பிறகே, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகு 10 முறை வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு, சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகள் சட்டத்துக்குட்பட்டு முறையாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா்.

மேலும், கரூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவா்களின் பெயா்களை நீக்கக் கோரி முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாக அவா் கூறினாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வாக்காளா் பட்டியல் தொடா்பான வழக்குகள் அனைத்தையும் வரும் 13-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com