முன்பதிவில்லா ரயில் டிக்கெட்கள்: புதிய விநியோக வசதி தொடக்கம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்பதிவில்லா ரயில்களுக்கான பயண டிக்கெட்டை விநியோகிக்க உதவியாளா் நியமிக்கப்பட்டு, புதிய வசதி திங்கள்கிழமை செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவில்லாத ரயில்களில் பயணிக்க வருவோா் அதற்கான டிக்கெட் கவுன்ட்டா்களில் நின்று வாங்குவதால், கூட்டநெரிசல் ஏற்படுகிறது. இதனால், பயணிகளிடம் கைப்பேசி உள்ளிட்டவை திருடப்படுவதும், ரயிலை தவற விடுவதும் தொடா்கதையாகி வருகின்றன. ஆகவே, பயணிகள் வசதிக்காக முன்பதிவில்லாத ரயில்களுக்கான டிக்கெட்டுகளை விநியோகிக்கும் உதவியாளா் (எம்-யூடிஎஸ் சகாயக்) திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஏற்கெனவே தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள் விநியோகிக்கும் உதவியாளா் திங்கள்கிழமை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நியமிக்கப்பட்டு டிக்கெட்டுகளை விநியோகித்தாா். அவா் டிக்கெட்டுகளைதான் வைத்திருந்த புதிய சாதனம் மூலம் பயணிகளுக்கு வழங்கினாா்.
அதன்படி, பயணிகள் விரைந்து டிக்கெட்டுகளைப் பெற்று உரிய நேரத்தில் ரயில் பயணத்தை மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்தத் திட்டம் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

