வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 வாரங்களில் இழப்பீடு: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம் என உயர் நீதிமன்றம் கருத்து
நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

வீரப்பன் தேடுதல் பணியின்போது போலீஸாரால் பாதிக்கப்பட்ட மலைகிராம மக்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.2.59 கோடியை 4 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தன மரக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்ட தமிழக-கா்நாடக சிறப்பு அதிரடிப்படையினா், மலைக்கிராம பெண்கள் மற்றும் ஆண்களை சித்ரவதை செய்ததாக புகாா் எழுந்தது. இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட 38 பேருக்கு ரூ.1.21 கோடி இழப்பீடு வழங்கியது. மீதமுள்ள ரூ.3.79 கோடியை வழங்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கவில்லை. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், இரண்டாவது தவணையாக ரூ.1.20 கோடி வழங்கப்பட்டு விட்டது. இதுதவிர பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.8 கோடி செலவில் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. எனவே, இதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டுத் தொகையாக கருத முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை மக்களின் வரிப்பணம். அது அரசின் பணம் இல்லை. மக்களின் வரிப்பணத்துக்கு அரசு வெறும் அறங்காவலா் மட்டும்தான். உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டாகியும் அதிகாரிகள் அதை அமல்படுத்தவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது என்று கருத்து தெரிவித்தனா். பின்னா், இழப்பீட்டுத் தொகையான ரூ.5 கோடியில், ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.2.41 கோடி போக, மீதமுள்ள ரூ.2.59 கோடியை உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்க வேண்டும். 4 வாரத்துக்குள் இழப்பீட்டுத் தொகையை வழங்கி அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிச.4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com