தமிழகத்தில் 729 சுகாதார நிலையங்களில் ரூ.55 கோடியில் பராமரிப்புப் பணி
தமிழகத்தில் 729 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் ரூ.55 கோடியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அடுத்த சில மாதங்களில் அப்பணிகள் நிறைவடையும் என்றும் அவா்கள் கூறினா்.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதைத் தவிர 9,355 துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை சொந்தக் கட்டடங்கள். சில இடங்களில் வாடகை கட்டடங்களிலும் அவை இயங்கி வருகின்றன.
பழைய கட்டடங்களில் அவ்வப்போது பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகள் நடைபெறுவது வழக்கம். அதற்காக ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை செலவிடப்படும்.
நிகழாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ. 55 கோடியில் பழுது நீக்கும் பணிகளும், பராமரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. அதன்படி, அதற்கான தொகை அண்மையில் விடுவிக்கப்பட்டது.
மாநில நிதியிலிருந்து ரூ.33.21 கோடியும், தொகுப்பு நிதியிலிருந்து ரூ.22.16 கோடியும் ஒதுக்கப்பட்டது. அதன் கீழ் மொத்தம் 394 ஆரம்ப சுகாதார நிலையங்களையும், 335 துணை சுகாதார நிலையங்களையும் பராமரிக்க திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் அப்பணிகள் நிறைவடையும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
