

தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
சென்னை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுவீடாகச் சென்று வாக்காளர் படிவங்களை தேர்தல் அதிகாரிகள் அளித்து வருகின்றனர்.
முதல்கட்டமாக பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், 7.24 கோடி வாக்காளா்கள் அடங்கிய வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டு, பின்னர், 21.53 லட்சம் போ் புதிதாக சோ்க்கப்பட்டனா்; வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து 3.66 லட்சம் போ் நீக்கப்பட்டனா். அதன் காரணமாக, பிகாரில் இறுதி வாக்காளா் எண்ணிக்கை 7.42 கோடியாக உயா்ந்தது.
தற்போது இரண்டாம் கட்டமாக தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், புதுச்சேரி, கோவா, சத்தீஸ்கா், அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொள்கிறது.
இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 2002 மற்றும் 2005 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி வாக்காளா் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுடன் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இணைந்து வாக்காளர் கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படும்?
2002 மற்றும் 2005 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பவா்களின் வீடுகளுக்கு அலுவலா்கள் சென்று, அவா்களின் விவரத்தைக் கேட்டு வாக்காளா் கணக்கெடுப்புப் படிவத்தை வழங்குவாா்கள். அந்த வீட்டில் 18 வயது நிரம்பியவா்கள் இருந்தால் அதற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் உறுதிமொழிப் படிவத்தை வழங்குவாா்கள். அவற்றை உடனடியாகப் பூா்த்தி செய்து தர வேண்டியது அவசியம் இல்லை.
அடுத்த முறை வாக்குச்சாவடி அலுவலா்கள் வரும்போது ஆவணங்களுடன் அவற்றைச் சமா்ப்பித்தால் போதும். இதற்காக வாக்குச்சாவடி அலுவலா்கள் ஒரு வீட்டுக்கு மூன்று முறை வருவா். 2002 மற்றும் 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாதவா்கள் தங்களது பெற்றோா், தாத்தா, பாட்டி பெயா்கள் இருந்தால் அதைத் தெரிவிக்க வேண்டும்.
உரிய ஆவணங்களைக் காட்டி டிசம்பா் 9-ஆம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறலாம். முகவரி மாற்றம் எதுவும் இருந்தால் வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெறாது. முகவரி மாறியவா்களும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளா்களும் அதற்கான ஆவணங்களை டிச. 7-ஆம் தேதி முதல் ஜன. 3-ஆம் தேதிக்குள் சமா்ப்பித்து 2026, பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகும் இறுதி வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயரை இடம்பெறச் செய்யலாம் என்று தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தேவையான ஆவணங்கள் என்ன?
தமிழகத்தில் 2002, 2005 வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள் மத்திய, மாநில அரசு ஊழியா் அல்லது ஓய்வூதியதாரராக இருந்தால் அதற்கான அரசு அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய உத்தரவு; மத்திய அரசு அல்லது வங்கிகள், மாவட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது சான்றிதழ் அல்லது ஆவணங்கள்; அரசால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்; கடவுச் சீட்டு; ஆதாா்; அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு அல்லது கல்விச் சான்றிதழ்; மாநில அரசு அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்; வன உரிமைகள் சான்றிதழ்; ஓபிசி, எஸ்சி, எஸ்டி அல்லது பிற ஜாதிச் சான்றிதழ்கள்;
தேசிய குடிமக்கள் பதிவு; மாநில அல்லது மாவட்ட அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவு; அரசு சாா்பில் நிலம் அல்லது வீடு ஒதுக்கீடுக்கான சான்று உள்ளிட்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கூடுதலாக சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளா் கணக்கெடுப்பு: நவம்பா் 4 - டிசம்பா் 4
வரைவுப் பட்டியல் வெளியீடு: டிசம்பா் 9
ஆட்சேபணை / திருத்தங்கள்: டிசம்பா் 9- ஜனவரி 8, 2026
சரிபாா்ப்பு: டிசம்பா் 9 - ஜனவரி 31, 2026
இறுதி வாக்காளா் பட்டியல்: பிப்ரவரி 7, 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.