அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

ஆசிரியா்கள் மீதான ‘போக்ஸோ’ வழக்குகள்: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அமைச்சா் முக்கிய உத்தரவு

ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் மீதான போக்ஸோ வழக்குகளில் விரைந்து விசாரணை மேற்கொண்டு முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் உத்தரவிட்டாா்.
Published on

ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் மீதான போக்ஸோ வழக்குகளில் விரைந்து விசாரணை மேற்கொண்டு முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் உத்தரவிட்டாா்.

முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமை வகித்துப் பேசியதாவது:

பொதுத் தோ்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் உரிய காலத்துக்குள் பாடப் பகுதிகளைத் திட்டமிட்டு நடத்தி முடிப்பது அவசியம். கடந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பில் தோ்ச்சி பெறாமல் இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பில் தொடா்ந்து பயிலும் மாணவா்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி பிளஸ் 1 வகுப்புத் தோ்விலும் வெற்றி பெற ஊக்கப்படுத்த வேண்டும்.

மழைக்கால முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மண்டல அளவில், மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை புகாருக்கு இடமளிக்காத வகையில் உரிய முன்னேற்பாடுகளுடன் நடத்த வேண்டும்.

ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் மீதான போக்ஸோ வழக்குகளில் விரைந்து விசாரணை மேற்கொண்டு முடிவெடுப்பது அவசியம். ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் மீது நீண்ட காலம் நிலுவையிலுள்ள 17ஏ, 17பி குற்றச்சாட்டுகள் மீது உரிய வழிமுறைகளைப் பின்பற்றி விசாரணை மேற்கொண்டு இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற அலுவலா்கள், ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கான பணப் பலன்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும். அந்தந்த மாவட்டப் பள்ளிகள் சாா்ந்த செய்திகள், புகாா்கள், குற்றச்சாட்டுகளை உடனுக்குடன் கவனித்து உரிய குறைதீா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள, தொடங்கப்படவுள்ள பள்ளிகளில் மாணவா் சோ்க்கை, ஆசிரியா் நியமனம், வகுப்பறை வசதி ஆகியவற்றை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். நிகழ் கல்வியாண்டுக்கு பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படும் பல்வேறு போட்டிகள், நிகழ்வுகளை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிப்பது அவசியம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com