வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் பல குளறுபடிகளைக் கொண்டிருப்பதாகவும் பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது.
சென்னையில் திமுக எம்.பி.யும் வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் சில இடங்களில், மக்களிடம் படிவத்தைக் கொடுத்துவிட்டு மறுநாளே கேட்கின்றனர். இதில் மிகுந்த குழப்பத்துக்கு உள்ளாக்கும் வேலைகள் நடக்கின்றன. பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம்.
தேர்தல் ஆணையம் இந்த பணிகளுக்கு தேர்வு செய்துள்ள காலம், நடைமுறைக்கு ஒவ்வாத காலம். நவ. 4 முதல் டிச. 4 ஆம் தேதி வரை மட்டுமே கணக்கீடு படிவம் கொடுத்து வாங்கும் காலமாக இருக்கிறது. டிச. 4 ஆம் தேதிக்குள் உங்கள் படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.
இப்போது வடகிழக்கு பருவமழை காலம், அதனால் சிக்கல்கள் அதிகமாக இருக்கும். மேலும் நெல் அறுவடை காலம். 2026 பிப்ரவரி வரை இந்த பணிகள் நடக்கின்றன. இந்த காலத்தில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை வருகிறது, தேர்தல் ஆணையம் இதை கணக்கிடவில்லை. இது அரசு ஊழியர்கள், வாக்காளர்களுக்கு சிரமமாக இருக்கும்.
மேலும் தேர்தல் ஆணைய அறிக்கையில் சட்ட மீறல்களும் விதி மீறல்களும் அதிகம் இருக்கின்றன.
பிகார் மாநிலத்தில் புதிதாக சேர்க்கக்கோரி படிவத்தை நிரப்பிக் கொடுப்பவர்கள் அதனுடன் அடையாள ஆவணத்தையும் கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் அடையாள ஆவணம் தேவையில்லை, படிவம் மட்டும் நிரப்பிக் கொடுத்தால் போதும்.
ஜனநாயகத்திற்கு அடிப்படையே வாக்காளர் பட்டியல். இது அரசியல் கட்சிகளுக்கானது மட்டுமல்ல, இது ஒவ்வொரு வாக்காளருக்கும் இருக்கும் உரிமை. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அதிமுக இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
டிச. 4 ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் வழங்கும் கணக்கீடு படிவத்தை நிரப்பித் தரவில்லை என்றால் நீங்கள் வாக்காளராக இருக்க மாட்டீர்கள். வரைவு வாக்காளர் டிச. 7 ஆம் தேதி வெளியாகும் என்று கூறியிருக்கிறார்கள். இதில் உங்களுடைய பெயர் இருக்காது. புதியதாக வாக்காளராக சேர்க்க வேண்டும் என்று படிவம் 6-யை நீங்கள் கேட்க நேரிடும்.
நீங்கள் படிவம் நிரப்பித் தந்து வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால், அந்த சட்டமன்ற தொகுதிக்கான அதிகாரி உங்களுக்கு நோட்டீஸ் வழங்குவார். உங்களுடைய படிவத்தில் தகவல்கள் சரியில்லை என அடையாள சான்றிதழ்களைக் கேட்பார். அதை எப்போது, யார் கேட்பார்கள்? யாரிடம் கொடுக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கு எல்லாம் தேர்தல் ஆணைய அறிக்கையில் பதில் இல்லை.
தேர்தல் ஆணையத்தின் அறிக்கை தெளிவற்ற, குழப்பமான அறிக்கை. ஊழியர்கள் தேர்தல் ஆணையம் கூறியபடி நடப்பார்கள். வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி வெறும் கண்துடைப்புதான்.
தகுதியுள்ள வாக்காளர் நீக்கப்பட கூடாது, தகுதியற்ற வாக்காளர் சேர்க்கப்படக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம். எங்களின் நோக்கமும் அதுதான்.
தேர்தல் ஆணையம் வழங்கும் படிவத்தில் 2002ல் நாம் வாக்களித்த தகவல்களைக் குறிப்பிட வேண்டும். நான் என்னுடைய தகவல்களை எடுக்கவே அரை மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து தகவல்களை எடுப்பது எளிதாக இருக்கவில்லை. 2002, 2005ல் வாக்காளர் பட்டியலில் முழுமையான விவரங்கள் இல்லை. அதேபோல எஸ்.ஐ.ஆர். ஒரு மணி நேரத்தில் புரிந்துகொள்ளக்கூடியது அல்ல.
கணினி தெரிந்தவர்கள் மட்டுமே 2002ல் உங்களுடைய வாக்கு எங்கே இருக்கிறது என்று கண்டறிந்து அந்த படிவத்தை பூர்த்தி செய்ய முடியும். தவறான தகவல்களைத் தந்தால் உங்கள் பெயர் நீக்கப்பட்டு விடும். நீங்கள் மீண்டும் புதிய வாக்காளராக மட்டுமே சேர்க்க முடியும். இதுபோன்ற பல சிக்கல்கள் இருக்கின்றன.
திமுகவில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு இதுகுறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் உள்ள வாக்காளர்களின் உரிமையைக் காப்பது அவசியம். மக்களின் வாக்குகள் நீக்கப்படாமல் இருப்பதற்கு திமுக பொறுப்பாளர்களுக்கு உதவும் வகையில் இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் திமுகவின் வழக்கறிஞர்கள் குழுவை தொடர்புகொள்ளலாம்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.