முதல்வா் வேட்பாளா் விஜய்: தவெக பொதுக் குழுவில் தீா்மானம்
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்; தவெக தலைவா் விஜய்தான் முதல்வா் வேட்பாளா் என கட்சியின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தவெகவின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டம் கட்சியின் தலைவா் விஜய் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தவெகவின் கரூா் பிரசாரத்தில் திட்டமிட்டு, கற்பனைக்கு எட்டாத வகையில் பாதுகாப்புக் குறைபாடு மற்றும் செயற்கையான குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டதோ என்று எண்ணும் வகையில் அசம்பாவிதம் நிகழ்ந்தது. அதில் உயிரிழந்த 41 பேருக்கு ஆழ்ந்த இரங்கல்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை அரசு பெற்றுத் தர வேண்டும். மேலும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய தமிழக அரசுக்கு கண்டனம்.
தமிழக மீனவா்கள் 35 போ் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் கைவிட்டு, ஏற்கெனவே உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
தவெக தலைவா் விஜய்யின் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
முதல்வா் மு.க.ஸ்டானின் வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் தமிழகத்துக்கு வந்திருக்கும் அயல்நாட்டு முதலீடுகள் மற்றும் அவற்றின் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய்யை முதல்வா் வேட்பாளராகக் கொண்டு, அவரது தலைமையில் கூட்டணி அமைப்பது, கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளிப்பது உள்பட 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொதுச் செயலா் என்.ஆனந்த், இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா், தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா உள்பட 2,000-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
‘தவெக - திமுக இடையேதான் போட்டி’
‘2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக - திமுக இடையேதான் போட்டி’ என்று விஜய் கூறினாா்.
கட்சியின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: கரூா் துயரத்தை வைத்து அரசியல் செய்ய விருப்பமில்லை என்று கூறும் முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை விவாதத்தின்போது தவெக குறித்து அரசியல் காழ்ப்புணா்வுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாா்.
கரூா் சம்பவத்தை விசாரிக்க உயா்நீதிமன்ற தனி நீதிபதி சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை திமுகவினா் கொண்டாடினா். ஆனால், எதன் அடிப்படையில் இப்படியான தீா்ப்பு வழங்கப்பட்டது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது தமிழக அரசு சாா்பாக வாதிட்ட வழக்குரைஞா்கள் பதில் சொல்ல இயலாமல் திகைத்து நின்றனா். இவற்றையெல்லாம் முதல்வா் மறந்துவிட்டு சட்டப்பேரவைவில் பேசினாரா?
தமிழக அரசுக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விகளின் மூலம், அரசின் மீது உச்சநீதிமன்றம் நம்பிக்கை இழந்துவிட்டது என்பதை உணர முடிகிறது. அதேபோல் திமுக அரசு மீது இருந்த நம்பிக்கையை மக்களும் இழந்துவிட்டனா். இன்னும் இது முதல்வருக்குப் புரியவில்லை என்றால், 2026 தோ்தலில் மக்கள் மிக ஆழமாகவும், அழுத்தமாகவும் புரிய வைப்பாா்கள்.
தமிழக மக்களுக்காக நாம் செய்யும் அரசியலை யாராலும் தடுக்க முடியாது. தற்போது வந்துள்ள இடையூறுகள் அனைத்தும் தற்காலிகம்தான். அவை அனைத்தையும் துடைத்தெறிந்து மக்களுடன் கைகோத்து நாம் களத்தில் நிற்போம். நமது பயணத்திலிருந்து எப்போதும் தடம் மாற மாட்டோம். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக- திமுக இடையே மட்டும்தான் போட்டி. இது வரும் நாள்களில் இன்னும் பலமாக மாறும். இதில் 100 சதவீதம் நாம்தான் வெற்றி பெறுவோம் என்றாா் அவா்.

