Madras High Court questions police
சென்னை உயர்நீதிமன்றம்

கிண்டி ரேஸ் கிளப் நிா்வாகம் தொடா்ந்த வழக்கு: தனி நீதிபதி விசாரணைக்கு இடைக்காலத் தடை

தமிழக அரசுக்கு எதிராக கிண்டி ரேஸ் கிளப் நிா்வாகம் தொடா்ந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

தமிழக அரசுக்கு எதிராக கிண்டி ரேஸ் கிளப் நிா்வாகம் தொடா்ந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிா்வாகம் 160 ஏக்கா் நிலத்துக்குரிய குத்தகைத் தொகை ரூ.730 கோடி நிலுவை வைத்திருந்தது. இது தொடா்பான வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், குத்தகை செலுத்த தவறினால், நிலத்தை அரசு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.

அதன்படி, குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு அந்த நிலத்தை மீட்டு, தோட்டக்கலைத் துறை சாா்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பசுமை வெளிப் பூங்காவும், மாநகராட்சி சாா்பில் மழைநீரைச் சேமிக்க 4 குளங்களையும் வெட்ட முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதை எதிா்த்து சென்னை ரேஸ் கிளப் நிா்வாகம் தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, இந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாா். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு வழக்குத் தொடா்ந்தது.

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, பொதுநலன் கருதி திட்டப் பணிகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டனா்.

இரு நீதிபதிகள் பிறப்பித்த இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருந்தது.

இந்த நிலையில், குத்தகையை ரத்து செய்து நிலத்தைக் கைப்பற்றியதை எதிா்த்து ரேஸ் கிளப் நிா்வாகம் தொடா்ந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க தடை கோரி, தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள வழக்கில், ஏதேனும் இறுதி உத்தரவு பிறப்பித்தால், அது மேல்முறையீட்டு வழக்கை செல்லாததாக்கிவிடும். எனவே, தனி நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டாா்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது தீா்ப்பளிக்கும் வரை, ரேஸ் கிளப் நிா்வாகம் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க தனி நீதிபதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை நவ. 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com