தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இனி உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு, கடந்த 1991-இல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தை அமைத்தது. இதன் மூலம் தமிழக காவல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத் துறை ஆகியவற்றில் சீருடை பணியாளர் காலிப்பணியிடங்களுக்கும், புதிய பணியிடங்களுக்கும் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்ட பின்னர், தேர்ந்தெடுக்கப்படும் உதவி ஆய்வாளர்களுக்கு (எஸ்.ஐ.) காவலர் பயிற்சி கல்லூரியில் ஒரு ஆண்டு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணி வழங்கப்படுகிறது.
பதவி உயர்வில் குளறுபடி: காவலர் பயிற்சி கல்லூரியில் நடத்தப்படும் தேர்வில் உதவி ஆய்வாளர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே பதவி உயர்வுக்கான பட்டியலில் ஒருவரது பணிமூப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பிற மாநிலங்களில் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் ஒருவர் உதவி ஆய்வாளராக தேர்ச்சி பெறும்போது வழங்கப்படும் மதிப்பெண்கள் பதவி உயர்வுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
காவலர் பயிற்சி கல்லூரியில் வழங்கப்படும் மதிப்பெண்களே பதவி உயர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதால், தமிழக காவல் துறையில் நிர்வாக ரீதியில் பல்வேறு இடர்ப்பாடுகளும், பிரச்னைகளும் ஏற்பட்டு வந்தன.
முக்கியமாக, சீருடை பணியாளர் தேர்வு வாரிய தேர்வில் முதல் இடத்தைப் பிடிக்கும் ஒரு உதவி ஆய்வாளர், காவலர் பயிற்சி கல்லூரியில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றால் பணி மூப்பு பட்டியலில் பின்தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
தேர்வில் முறைகேடு புகார்: அதேவேளையில், சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வில் கடைசி இடத்தில் இருந்த ஒரு உதவி ஆய்வாளர் காவலர் பயிற்சி கல்லூரியில் அதிக மதிப்பெண்கள் பெற்றால், பதவி உயர்வுக்கான பணி மூப்புப் பட்டியலில் முதல் இடத்துக்கு வந்துவிடுவார். மேலும், காவலர் பயிற்சி கல்லூரி தேர்வுகள் மீதும் பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.
குறிப்பாக, காவலர் பயிற்சி கல்லூரிகளில் சில உயரதிகாரிகள், தேர்வில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அதிக மதிப்பெண்களை வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பதவி உயர்வில் பாதிக்கப்படும் உதவி ஆய்வாளர், அதிகாரிகளிடம் மனு அளித்து, தங்களுக்கு நிவாரணம் கோருகின்றனர். இதன் விளைவாக டிஜிபி அலுவலகத்திலும், மண்டல ஐஜி அலுவலங்களிலும், சரக டிஐஜி அலுவலகங்களிலும், காவல் ஆணையர் அலுவலகங்களிலும் பதவி உயர்வு கோரும் மனுக்கள் குவிக்கின்றன.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு: இதுதொடர்பாக சிலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதால், ஒட்டுமொத்தமாக யாருக்கும் பதவி உயர்வு வழங்க முடியாத நிலையில் காவல் துறை சிக்கித் தவிக்கிறது. இதற்கிடையே, உதவி ஆய்வாளர் பதவி உயர்வு பணி மூப்புக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வழங்கப்படும் மதிப்பெண்களைப் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வழங்கப்படும் மதிப்பெண்களைப் பதவி உயர்வு பணிமூப்புக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த மே மாதம் இறுதியில் உத்தரவிட்டது.
மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 1996 முதல் 2024-ஆம் ஆண்டு வரை நேரடியாக தேர்வு செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்களின் பதவி உயர்வுக்கான பணிமூப்பையும் இவ்வாறே பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசு உத்தரவு: இதை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைப் பின்பற்றி தமிழக அரசு, இதுவரை இருந்த நிலையை மாற்றி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் வழங்கப்படும் மதிப்பெண்களை உதவி ஆய்வாளர்கள் பதவி உயர்வுக்கான பணிமூப்புக்குப் பயன்படுத்த வேண்டும் என இரு நாள்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் தமிழக காவல் துறையில் கால் நூற்றாண்டுக்கு மேல் நீடித்து வந்த பிரச்னைக்கு முடிவு கிடைத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், பதவி உயர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.