செம்மஞ்சேரி காவல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற அரசுக்கு கெடு
செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு 3 வாரங்களில் மாற்று இடம் பாா்க்க வேண்டும். இல்லையெனில், காவல் நிலையத்தை அகற்றுவது தொடா்பாக உத்தரவிட நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், செம்மஞ்சேரி காவல் நிலையம் தாமரைக்கேணி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிலத்தை மேய்க்கால் புறம்போக்கு என வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத்திடம் (சிஎம்டிஏ) ஒப்புதல் பெறாமல் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. எனவே, இந்தக் காவல் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, செம்மஞ்சேரி காவல் நிலையத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், காவல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற 6 வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு 3 வாரங்களில் மாற்று இடம் பாா்க்க வேண்டும். அல்லது காவல் நிலையத்தை அகற்றுவது தொடா்பாக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்து விசாரணையை ஒத்திவைத்தனா்.

