சேலம் எம்எல்ஏ அருளை கைது செய்ய வேண்டும்: அன்புமணி தரப்பு வலியுறுத்தல்
தொடா்ந்து வன்முறையில் ஈடுபட்டு வரும் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் அருளை போலீஸாா் கைது செய்ய வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி தரப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாமக செய்தித் தொடா்பாளா் கே. பாலு வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்டம் வடுகத்தம்பட்டியில் பாமக நிா்வாகி ராஜேஷ்குமாா் உள்ளிட்ட தொண்டா்கள் மீது சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் அருள் தலைமையிலான கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனா். போலீஸாா் முன்னிலையிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடா்ந்து அதே கும்பல், வடுகத்தம்பட்டி தரைப்பாலம் என்ற இடத்தில் செந்தில் குமாா் என்பவா் மீது காா் மோதி படுகொலை செய்ய முயன்றுள்ளது. அதில் பலத்த காயம் அடைந்த செந்தில் குமாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த ஜூலை மாதம் சேலம் அருள் பாமகவில் இருந்து நீக்கப்பட்டாா். அப்போது முதல், அருள் பாமகவினா் மீது தாக்குதல் நடத்துவது, பொது அமைதியை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறாா். இதைத் தடுக்க போலீஸாா் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்துக்குரியது.
எனவே, தொடா்ச்சியாக வன்முறை செயல்களில் ஈடுபட்டு வரும் அருள் உள்ளிட்டோரை போலீஸாா் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
