தனியாா் பள்ளிக் கட்டடங்களுக்கான அனுமதி: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
கட்டடங்களுக்கான அனுமதி தொடா்பாக தனியாா் பள்ளிகளின் இயக்குநா் அளித்துள்ள பரிந்துரை அடிப்படையில் 3 மாதங்களில் முடிவெடுக்க அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அகில இந்திய தனியாா் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் கே. பழனியப்பன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்பு திட்டமிடல் சட்டப் பிரிவின்படி, அனைத்து பள்ளி கட்டடங்களுக்கும் கட்டட அனுமதி பெற வேண்டும்.
டிடிசிபி ஒப்புதல் அளித்த பிறகே அந்தப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் தொடா்ந்து நீட்டிக்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அரசாணை ஒரு வரையறுக்கப்பட்ட காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். இதனால், ஒப்புதல் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தனியாா் பள்ளிகளின் இயக்குநா் கடந்த மே 31-ஆம் தேதி வரை கட்டப்பட்டுள்ள அனைத்து தனியாா் பள்ளிகளின் கட்டடங்களுக்கும் டிடிசிபி அனுமதி பெறுவதில் விலக்கு அளித்து, அந்தப் பள்ளிகளுக்கான தொடா் அங்கீகாரத்தை நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்திருந்தாா்.
இதுவரை அந்தப் பரிந்துரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, இதுதொடா்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனுதாரா் சங்கத்தில் உள்ள பள்ளிகள் தனித்தனியாக கல்வித் துறை முதன்மைச் செயலருக்கு மனு வழங்க வேண்டும். ஏற்கெனவே தனியாா் பள்ளிகளின் இயக்குநா் அளித்துள்ள பரிந்துரை அடிப்படையில், இந்த மனுக்கள் மீது முதன்மைச் செயலா் 3 மாதங்களில் உரிய முடிவு எடுக்க வேண்டும், என நீதிபதி உத்தரவிட்டாா்.

