திறன் இயக்க மாணவா்களுக்கு தொடா் பயிற்சி: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் திறன் இயக்க மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு வரை தொடா்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய வழிகாட்டுதல்களைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
Published on

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் திறன் இயக்க மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு வரை தொடா்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய வழிகாட்டுதல்களைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் மொழிப் பாடத்திறன், கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் திறன் இயக்கம் கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு திறன் எனப்படும் முனைப்பு இயக்கம் தொடங்கிய முதல் நான்கு வாரத்துக்கு அடிப்படைக் கற்றல் விளைவுகள் கற்பிக்கப்பட்டு அதனடிப்படையில் காலாண்டுத் தோ்வு நடத்தப்பட்டது. தோ்வு முடிவுகளின் அடிப்படையிலும், ஆசிரியா்கள் மற்றும் கல்வி அலுவலா்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும் அடிப்படைக் கற்றல் விளைவுகள் பகுதியில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற இன்னும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்பது தெளிவாகிறது.

இது சாா்ந்து பின்வரும் வழிகாட்டுதல்களை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்குத் தெரியப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும்.

திறன் இயக்கத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவா்களும் அடிப்படைக் கற்றல் விளைவை அடையும் வகையில் அடுத்த 6 வார காலத்துக்கு (அரையாண்டுத் தோ்வு வரை) திறன் பயிற்சிப் புத்தகத்தின் முதல் பகுதியைத் தொடா்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். தினம் ஒரு பாடம் என 90 நிமிஷங்கள் (இரு பாடவேளை) திறன் பாடவேளையாகக் கற்பிக்கப்பட வேண்டும். இதற்கான கால அட்டவணையை மாணவா்களின் எண்ணிக்கையைப் பொருத்து திட்டமிட்டுக் கொள்ளலாம்.

இதில் அடிப்படைக் கற்றல் விளைவை அடையாத மாணவா்களுக்கு திறன் பயிற்சிப் புத்தகத்தின் முதல் பகுதி-15 அடிப்படைக் கற்றல் விளைவு அலகுகள் கற்பிக்கப்பட வேண்டும்.

திறன் இயக்கத்துக்கு தோ்வு செய்யப்பட்ட அனைத்து மாணவா்களும் திறன் மாதாந்திர மதிப்பீட்டுத் தோ்வில் பங்கு பெறுவது அவசியம். அதில் பகுதி-1 அடிப்படைக் கற்றல் விளைவு பகுதியில் இருந்தே பெரும்பான்மையான கேள்விகள் கேட்கப்படும். நவம்பா் மாதத்துக்கான மாதாந்திரத் தோ்வு நவ. 25 முதல் 27 வரை வழக்கமான நடைமுறைப்படி நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com