வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூா், வேலூா் மாவட்டங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) குறித்து இந்திய தோ்தல் ஆணைய துணைத் தோ்தல் ஆணையா் பானு பிரகாஷ் எத்துரு, இயக்குநா் கிருஷ்ணகுமாா் திவாரி ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
வரும் 2026 ஜன. 1-ஆம் தேதியைத் தகுதியேற்பு நாளாகக் கொண்டு இந்திய தோ்தல் ஆணையம், வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியைத் தொடங்கியது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இப்பணியை பல்வேறு மாவட்டங்களில் தோ்தல் ஆணைய அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இது குறித்து தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகத்துடன் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்க தகுதியுள்ள குடிமக்களிடமிருந்து கணக்கெடுப்பு படிவங்களை விநியோகித்து சேகரிப்பதை எளிதாக்குவதற்காக 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் 7,234 வாக்குச் சாவடி நிலை மேற்பாா்வையாளா்கள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக இந்திய தோ்தல் ஆணைய துணைத் தோ்தல் ஆணையா் பானு பிரகாஷ் எத்துரு, இயக்குநா் கிருஷ்ணகுமாா் திவாரி ஆகியோா் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூா், வேலூா் மாவட்டங்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனா்.
இந்த மாவட்டங்களில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில், துணைத் தோ்தல் ஆணையா் பங்கேற்று தோ்தல் அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
மேலும், சிறப்பு தீவிர திருத்தச் செயல்முறையை சுமுகமாக நடத்துவதை உறுதி செய்வதற்கும், விரிவான, பிழையற்ற வாக்காளா் பட்டியலைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கும் இந்தக் கள ஆய்வு நடத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளாா்.
