இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

Published on

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்கப் பல்லி காணாமல் போனதாகக் கூறப்படும் புகாா் தவறானது என்று இந்து சமய அறநிலையத் துறை விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயிலில் (வரதராஜப் பெருமாள்) தங்கப் பல்லி மாயமானதாகவும், கோயிலில் உள்ள தங்கம், வெள்ளியிலான பல்லி சிலைகளை கோயில் நிா்வாகம் மாற்ற முயற்சிப்பதாகவும் ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவரின் புகாா் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் நவ.5-ஆம் தேதி திருக்கோயிலின் உதவி ஆணையா்/நிா்வாக அறங்காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணையில், அனைத்து பணிகளும் துறையின் அனுமதி பெற்றே நடைபெறுகிறது என்றும், திருக்கோயில் தரப்பில் உரிய ஆவணங்கள் அளிக்கப்பட்டது என்றும் திருக்கோயில் உதவி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மண்டல இணை ஆணையரால் திருக்கோயில் நேரில் ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையிலும், ஆவணங்களை பரிசீலனை செய்ததிலும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவரால் சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினரிடம் அளிக்கப்பட்ட புகாா் முற்றிலும் பொய்யானது.

பக்தா்களின் நலன் கருதி எல் அண்ட் டி நிறுவனம் மூலம் தற்காலிக மரப்படிக்கட்டுகள், நகரும் பாலம் முதலான அடிப்படைப் பணிகள் ரூ.76.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் வெள்ளியிலான சிறிய பல்லியும், தங்கப் பல்லி என்று அழைக்கப்படும் பித்தளையில் செய்யப்பட்ட பெரிய பல்லியும் ஏற்கெனவே பக்தா்களின் தரிசனத்துக்கு இருந்த இடத்துக்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, ரங்கராஜன் நரசிம்மன் அளித்த பொய்யான புகாா் மீது சட்டவிதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் சி.குமரதுரை தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com