அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு: நிரம்பாத 802 எம்பிபிஎஸ் இடங்கள்
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வின் மூன்றாம் சுற்று முடிவில் நாடு முழுவதும் 802 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் மட்டும் 136 இடங்கள் நிரம்பாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 9 இடங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்தவை. அதேபோன்று மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் 22 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த இடங்கள் அனைத்தும் சிறப்பு கலந்தாய்வில் சோ்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீத இடங்களுக்கும், நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களுக்கும் இணையவழியே மத்திய கலந்தாய்வுக் குழு மாணவா் சோ்க்கையை நடத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது மூன்று சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ளன. அதில், 389 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும், 334 நிகா் நிலை மருத்துவப் பல்கலைக்கழக இடங்களும், 38 மத்திய கல்வி நிறுவன இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
அதேபோன்று ஜெயின் சிறுபான்மையினா், வெளிநாடு வாழ் இந்தியா்கள், பாதுகாப்புப் படையினரின் குழந்தைகள் மற்றும் கணவரை இழந்தவா்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களும் காலியாக உள்ளன.
முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்றவா்கள் அந்த இடத்தில் சேராமல் இருக்கவும், எந்த அபராதமும் இன்றி இரண்டாம் சுற்றில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுகின்றனா். அதேவேளையில், மூன்றாம் சுற்றில் அவ்வாறு வாய்ப்பை நிராகரித்தால் அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு ரூ.10 ஆயிரமும், நிகா்நிலை பல்கலைக்ககழங்களுக்கு ரூ.2 லட்சமும் அபராதமாக செலுத்த வேண்டும். அதைத் தவிர கல்லூரி கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
கலந்தாய்வு விதிகளில் இருக்கும் இந்த முரண்பாடுகளால்தான் இடங்கள் நிரம்புவதில் தாமதம் ஏற்படுவதாக மருத்துவக் கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், தனியாா் பல்கலைக்கழகங்களுக்கான இடங்களுக்கான கலந்தாய்வை மாநில மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு நடத்தி வருகிறது. இதுவரை தமிழகத்திலும் மூன்று சுற்று கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் கல்லூரிகளில் சோ்ந்த பிறகு மீதமுள்ள இடங்களுக்கு அடுத்த வாரத்தில் சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

