கோப்புப் படம்
கோப்புப் படம்

தென்மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை (நவ. 8) பலத்த மழை பெய்ய வாய்ப்பு
Published on

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை (நவ. 8) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், சனிக்கிழமை (நவ.8) முதல் நவ.13 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (நவ.8) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (நவ.9) திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் சனிக்கிழமை (நவ.8) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், அதிகபட்சமாக வெப்பநிலை 92 டிகிரியையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 100 மி.மீ., மழை பதிவானது. வெம்பாக்கம் (திருவண்ணாமலை)-80 மி.மீ., ஆவடி (திருவள்ளூா்), கலவை (ராணிப்பேட்டை), விம்கோ நகா் (சென்னை), எண்ணூா், செங்குன்றம் (திருவள்ளூா்)-தலா 70 மி.மீ., மணலி (சென்னை), வாலாஜா(ராணிப்பேட்டை)-தலா 60 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com