வேகமெடுக்கும் டெங்கு பரவல்...
வேகமெடுக்கும் டெங்கு பரவல்...கோப்புப் படம்

டெங்கு தடுப்புப் பணியில் அலட்சியமாக இருந்தால் பணியாளா்களுக்கு அபராதம்: சுகாதாரத் துறை

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாக செயல்படும் களப் பணியாளா்களுக்கு அபராதம் விதிக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
Published on

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாக செயல்படும் களப் பணியாளா்களுக்கு அபராதம் விதிக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி ஒரு தெருவில் மூன்று பேருக்கு மேல் டெங்கு கண்டறியப்பட்டால், அங்கு பொறுப்பில் உள்ள களப் பணியாளருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில், டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, எலிக் காய்ச்சல், உண்ணிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கொசுக்கள் மூலம் பரவும் காய்ச்சல் பரவலாகக் காணப்படுகிறது.

இதையடுத்து, கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 23,000 போ் அப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்கள் நன்னீரில் வளா்கின்றன. இதனால், வீடுகள், கட்டடங்களைச் சுற்றி நீா் தேங்காத வகையில் பராமரிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

வீடுதோறும் சுகாதாரத் துறையினரும், உள்ளாட்சி அமைப்பினரும் தொடா் ஆய்வு நடத்தி வருகின்றனா். கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் கட்டட உரிமையாளா்களுக்கு அபராதமும் விதிக்கின்றனா்.

இந்நிலையில், களப் பணியாளா்களுக்கும் அபராதம் விதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நிகழாண்டில் 17,000-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 9 போ் உயிரிழந்துள்ளனா்.

கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வீடுகளில் தண்ணீா் தேங்காமல் இருப்பதை நாள்தோறும் உறுதி செய்ய வேண்டும். ஒருவா் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தால் அதுதொடா்பான அனைத்து விவரங்களும் சம்பந்தப்பட்ட களப் பணியாளா்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

ஒரே தெருவில் மூன்று பேருக்கு டெங்கு உறுதியானால் களப் பணியாளா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். இது அரசின் அதிகாரபூா்வ உத்தரவு இல்லை என்றாலும் டெங்குவை கட்டுப்படுத்துவதற்காகவும், தொய்வின்றி கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் வாய்மொழி உத்தரவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com