

தெருவில் உள்ள நாய்களால் மக்கள் தொந்தரவுக்கு ஆளாவதாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் தெரு நாய்க்கடி சம்பவங்கள் தினமும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அரசும் இதற்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தெருநாய்களால் மட்டும் பிரச்னை இல்லை, வீட்டில் வளர்க்கப்படும் நாய்களாலும் ரேபிஸ் போன்ற கடுமையான பிரச்னைகள் வரலாம்.
ஏனெனில் சென்னையில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களில் 50% நாய்களுக்கு இன்னுமும் ரேபிஸ் தடுப்பூசி போடப்படவில்லை என்கின்றன தரவுகள்.
அதாவது சென்னை பெருநகர மாநகராட்சியில் உரிமத்திற்காக பதிவு செய்யப்பட வந்த நாய்களில் பெரும்பாலானவை ரேபிஸ் தடுப்பூசி போடவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.
2024 முதல் செல்லப்பிராணி உரிமம் பெற மொத்தம் 42,740 விண்ணப்பங்கள் சென்னை மாநகராட்சிக்கு வந்துள்ளன. அவற்றில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக 24,862 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
உரிமையாளர்கள் நாய்களுக்கு தடுப்பூசி போடவில்லை என்பதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் தடுப்பூசி போடாத நாய்கள் உள்ள வீட்டில் உள்ளோர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் உரிமம் பெற, மீண்டும் விண்ணப்பிப்பதில்லை. இதனால் தடுப்பூசி போடாத ஆயிரக்கணக்கான நாய்கள் வீட்டிற்கு வெளியேயும் அதாவது பொதுவெளியிலும் உலவுகின்றன.
நிராகரிப்புகளுக்கான காரணங்களக் குறிப்பிட்ட போதிலும் அதனை நிவர்த்தி செய்யாமலும் பலரும் மீண்டும் உரிமத்திற்கு விண்ணப்பிக்காமலும் இருப்பதாகவும் இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்றும் கூறுகிறார்கள்.
சென்னை மாநகராட்சி இதுவரை 12,708 உரிமங்களை மட்டுமே வழங்கியுள்ளது. இது மொத்த விண்ணப்பங்களில் 30% மட்டுமே. மேலும், சுமார் 5,170 விண்ணப்பங்கள் ஆய்வில் உள்ளன. பெயர்களில் உள்ள பிழைகள், சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் ஆகியவற்றின் காரணமாகவும் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ரேபிஸ் தடுப்பூசி போடப்படாத நாய்களை உரிமையாளர்கள் கூட்டிச் செல்லும்போது ரேபிஸால் பாதிக்கப்பட்ட தெரு நாய்கள், அந்த வீட்டு நாய்களைக் கடிக்கலாம், இப்போது வீட்டில் வளர்க்கப்படும் நாய், யாரையேனும் கடிக்க வாய்ப்புள்ளது. ஏன் அது உரிமையாளரை, அவரது வீட்டில் உள்ளவர்களைக்கூட கடிக்கலாம். மனிதர்களுக்கு ரேபிஸ் வந்தால் எந்த சிகிச்சையும் இல்லை என்று விலங்கு நல ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
ஏனெனில் பிட்புல்ஸ், ரோட்வீலர்ஸ் போன்ற நாய்கள் அதிகமாக தங்கள் உரிமையாளரைக் கடித்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. ஒருவேளை ரேபிஸ் தொற்று ஏற்பட்டால் அதன் பாதிப்புகளைத் தடுக்க உடனடி தடுப்பூசி தேவை. குழந்தைகளுக்கு இதன் மூலமாக அதிக ஆபத்து உள்ளது. ஏனெனில் தெருக்களில் விளையாடும் குழந்தைகளுக்கு, நாய்கள் கடித்ததே பெரும்பாலும் தெரிய வாய்ப்பில்லை, பெற்றோர்களிடமும் அவர்கள் உடனே சொல்லமாட்டார்கள், சொல்லவும் தெரியாது. அதனால் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் எனவும் இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
ரேபிஸ் நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
1913 என்ற கட்டணமில்லா அவசர தொலைபேசி எண்ணுக்கு முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
விரைவாக மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கடுமையாக தாக்கப்பட்டிருந்தால் ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் மருந்து அவசியம் செலுத்தப்பட வேண்டும்.
குழாயில் தண்ணீரை திறந்துவிட்டு காயத்தை சோப்பு அல்லது கிருமி நாசினியால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
பின்னர் காயங்களை மீது ஆன்டிசெப்டிக் மருந்து போட வேண்டும்.
மஞ்சள், எண்ணெய், எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது, காயத்தில் தையல் போடவும் கூடாது.
பின்னர் தேவைப்பட்டால் டெட்டனஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். (டெட்டனஸ் தடுப்பூசி போட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டால் நாய் கடித்தவுடன் இதை போட்டுக்கொள்ள வேண்டும்).
முடிந்தால் உங்களைக் கடித்த நாயை 10 நாள்களுக்கு கண்காணிக்கவும்.
வீட்டில் வளர்ப்பு நாய் இருந்தால்..
புதிதாக பிறந்த நாய்க்கு 3 மாதத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஓராண்டுக்கு பிறகு (இதே)பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறை ரேபிஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும்.
கால்நடை மருத்துவரின் கையெழுத்துடன் தடுப்பூசி போடப்பட்டதை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
சென்னை மாநகராட்சிகள், நாய்கள் வளர்ப்புக்கு உரிமம் வழங்க இந்த தடுப்பூசி ஆவணங்கள் தேவை.
இதுவரை தடுப்பூசி போடவில்லை என்றால் உடனடியாக நிபுணரை அணுகவும்.
புதிதாக பிறந்த நாய்களுக்கு ரேபிஸ், டிஹெச்பிபிஐ தடுப்பூசி, லெப்டோஸ்பிரோசிஸ், கென்னெல் காஃப் போன்ற தடுப்பூசிகள் அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.