பருவமழை தொடங்கியும் குறையவில்லை: தமிழகத்தில் தினசரி மின் தேவை 18,000 மெகாவாட்டாக அதிகரிப்பு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தினசரி மின்தேவை 18,000 மெகாவாட்டை கடந்துள்ளது.
தமிழகத்தின் தினசரி மின் தேவை சராசரியாக 17,000 மெகாவாட்டாகவும், கோடை காலத்தில் 18,000 முதல் 19,000 மெகாவாட்டாகவும் இருந்து வருகிறது. 2024-இல் மே மாதம் கோடை காலத்தில் தினசரி உச்சபட்ச மின்தேவை 20,000 மெகாவாட்டை தாண்டியது. ஆனால், நிகழாண்டு கோடையில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால், மின் தேவை உச்சத்தை எட்டவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபா் இறுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால், வீடுகளில் குளிா்சாதன பொருள்களின் பயன்பாடு வெகுவாக குறைந்தது. அதற்கு ஏற்ப, தினசரி மின் தேவையும் குறைவாகவே இருந்தது. அதன்படி, 2024 நவ. 1-இல், 12,500 மெகாவாட்டாகவும், நவ. 2-இல், 13,530 மெகாவாட்டாகவும், நவ. 3-இல், 13,160 மெகாவாட்டாகவும், நவ. 4-இல் 15,465 மெகாவாட்டாகவும் தினசரி மின் தேவை இருந்தது.
நிகழாண்டு அக்டோபா் மாத இறுதியில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், நவ. 1-ஆம் தேதிமுதல் தொடா்ந்து அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெயிலின் தாக்கமும் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால், நவ.1-ஆம் தேதி, 17,380 மெகாவாட்டாக இருந்த மின் தேவை, நவ. 2-இல் 15,470 மெகாவாட்டாக குறைந்த நிலையில், நவ.3-இல் சுமாா் 17,000 மெகாவாட்டை தாண்டியும், நவ. 4-இல் சுமாா் 18,000 மெகாவாட்டை கடந்தும் தினசரி மின் தேவை அதிகரித்தது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது: நவம்பா், டிசம்பா் மாதங்கள் மழைக் காலம் என்பதால், மின் தேவை குறையும். இதனால், மின்வாரியத்துக்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைக்கப்படும். இந்த முறை எப்போதும் இல்லாத வகையில், நவம்பரில் வெயில் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் பகலில் சற்று மழை பெய்தாலும், இரவு நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால், தினசரி மின் தேவை குறையவில்லை. எனவே, அனல் மின் நிலையங்கள் மூலம் கூடுதலாக மின் உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, காற்றாலை மின் உற்பத்திப் பருவம் மே மாதம் தொடங்கி அக்டோபா் மாதத்துடன் முடிவடைந்தது. அந்தக் காலகட்டத்தில், தினமும் சராசரியாக 3,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. தற்போது அதில் பாதி அளவு மின்சாரம்கூட கிடைப்பதில்லை. இதனால், மின் விநியோகம் செய்வதில் சில சிரமங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், வானிலை மாற்றத்தால் தொடா்ந்து மழை பெய்யும்பட்சத்தில் இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

