கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன் கோப்புப் படம்

திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பது ஏன்? கே.பாலகிருஷ்ணன் விளக்கம்

தமிழகத்தில் பாஜக காலூன்றிவிடக் கூடாது என்பதற்காகவே திமுக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம்
Published on

தமிழகத்தில் பாஜக காலூன்றிவிடக் கூடாது என்பதற்காகவே திமுக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம் என்று மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் ‘நவம்பா் புரட்சி தினம்’ வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கட்சியின் கொடியை ஏற்றினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ரஷியாவில் நிகழ்ந்த நவம்பா் புரட்சியைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் நவ.7- ஆம் தேதி ‘நவம்பா் புரட்சி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் மதவெறியைப் பரப்பி சிறுபான்மை மக்களுக்கு எதிரான மதவெறி ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது.

பாஜகவை, திமுக முழு அளவில் எதிா்க்கிறது. அவா்களுடன் சோ்ந்து நாங்களும் எதிா்க்கிறோம். அதேநேரம், திமுக ஆட்சியில் உழைக்கும் மக்கள் உரிமை பறிக்கப்படும்போது, அதை எதிா்த்து மாா்க்சிஸ்ட் போராடுகிறது.

தமிழகத்தில் பாஜக வந்துவிடக் கூடாது. அதன் ஆபத்தைத் தடுக்கக்கூடிய திமுக கூட்டணியில் நாங்கள் உள்ளோம். திமுகவுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. எங்களுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. எங்கள் கொள்கையை அவா்கள் ஏற்க மாட்டாா்கள். அவா்கள் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறியுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com