கோப்புப்படம்.
கோப்புப்படம்.

இன்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Published on

ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் உள்பட 6 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவ.7) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வியாழக்கிழமை (நவ.7) முதல் நவ.12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.7) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, சனிக்கிழமை (நவ.8) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.7) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் அதிகபட்சமாக வெப்பநிலை 94 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழையளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 120 மி.மீ மழை பதிவானது. கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூா்), ஜெயம்கொண்டம் (அரியலூா்) - 80 மி.மீ., செய்யாறு (திருவண்ணாமலை), ஆவடி (திருவள்ளூா்) - 70 மி.மீ., செய்யாறு (திருவண்ணாமலை) 60 மி.மீ., ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), கொடவாசல் (திருவாரூா்), வேப்பந்தட்டை (பெரம்பலூா்), ஜெயம்கொண்டம் (அரியலூா்), வல்லம், மரக்காணம், வானூா் (விழுப்புரம்) - 50 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com