போதைப் பொருள் வழக்கு: நடிகா் ஸ்ரீகாந்துக்கு அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை
சென்னையில் போதைப் பொருள் வழக்கில் சிக்கிய நடிகா் ஸ்ரீகாந்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளனா்.
சென்னையில் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டாா். அவா் கொடுத்த தகவலின் அடிப்படையில், நடிகா் கிருஷ்ணா கைது செய்யப்பட்டாா். முன்னதாக இந்த வழக்கில் பிரசாந்த், ஜவஹா், பிரதீப்குமாா் உள்ளிட்ட மேலும் பலா் கைது செய்யப்பட்டனா்.
இதற்கிடையே போதைப் பொருள் விற்பனையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத் துறைக்கு புகாா்கள் வந்தன. அவற்றின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். இதில் புழல் சிறையில் இருக்கும் பிரசாந்த், ஜவஹா், பிரதீப்குமாா் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் விசாரணை நடத்தினா்.
இதன் அடுத்தக் கட்டமாக நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பினா். இந்த அழைப்பாணையை ஏற்று நடிகா் கிருஷ்ணா கடந்த 29-ஆம் தேதி அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானாா். ஆனால் ஸ்ரீகாந்த், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டது.
மீண்டும் அழைப்பாணை: இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் நடிகா் ஸ்ரீகாந்துக்கு மீண்டும் ஒரு அழைப்பாணையை அமலாக்கத் துறை அதிகாரிகள் அனுப்பியுள்ளனா். இந்த அழைப்பாணையில் நவ.11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

