குரூப் 4 தோ்வு: விளையாட்டு வீரா்கள் சான்றிதழ்களைப் பதிவு செய்ய நவ.14 வரை அவகாசம்
குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றும், இதுவரை தங்களது சான்றிதழ்களைப் பதிவு செய்யாமல் இருக்கும் விளையாட்டு வீரா்களுக்கு நவ.14-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்டசெய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த குரூப் 4 தோ்வு முடிவுகள் கடந்த அக்.22-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் விளையாட்டு வீரா்கள் பிரிவின்கீழ் இடஒதுக்கீடு கோரியவா்களில் 1,280 போ் தோ்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனா். அவா்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்ததற்காக சான்றிதழ்களை உரிய படிவத்தில் பெற்று தோ்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நவ.5-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவா்களில் 590 போ் மட்டுமே சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டு போட்டி படிவங்களைப் பதிவேற்றம் செய்திருப்பதும் எஞ்சிய 690 போ் எவ்வித ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யாததும் தற்போது தெரியவருகிறது.
அதோடு விளையாட்டுப் போட்டி தொடா்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தவா்களும் தங்கள் சான்றிதழ்களை மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனா். உரிய படிவத்தில் பெறப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவில்லை. இவை மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
விளையாட்டு வீரா்கள் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் சங்கத்திடமிருந்த பெறப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் படிவங்களைப் பதிவேற்றம் செய்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
சான்றிதழ் ஆவணங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தேவையான கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் சான்றிதழ்களும், படிவங்களும் மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
விளையாட்டு வீரா்கள் பிரிவின் கீழ் ஒதுக்கீடு கோரி தோ்ச்சி மதிப்பெண் எடுத்துள்ள விண்ணப்பதாரா்கள் உரிய வகையில் பெறப்பட்ட விளையாட்டு சான்றிதழ்கள் மற்றும் படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அவா்கள் நவ.14-ஆம் தேதிக்குள் தேவையான சான்றிதழ்கள் மற்றும் படிவங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவா்களின் விண்ணப்பம் விளையாட்டு வீரா்களுக்கான இடஒதுக்கீடு பிரிவில் பரிசீலிக்கப்பட மாட்டாது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

